ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி!
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களை ஈரான் அனுமதித்தது பற்றி...
ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய சரக்கு கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், துபையிலிருந்து குஜராத் துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த தாய்லாந்து எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும்போது ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து, அடுத்தடுத்து பிரிட்டன், ஜப்பான் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதனிடையே, வளைகுடா நாடுகளில் இருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவரும் சரக்கு கப்பல்களை அனுமதிப்பது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் தாக்கப்பட்டு வரும் சூழலில், இந்திய கொடியுடன் வந்த புஷ்பக் மற்றும் பரிமல் ஆகிய இரு சரக்கு கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதித்துள்ளது. இதையடுத்து அந்த இரு கப்பல்களும் பாதுகாப்பாக ஹோர்முஸ் நீரிணையைக் கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் செல்லவும் ஈரான் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளிக்கும் பட்சத்தில் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.