முகப்பு
இந்தியா

ஃபரூக்கை கொல்ல முயன்றது ஏன்? துப்பாக்கியால் சுட்டவரின் பின்னணி குறித்து தீவிர விசாரணை

ஃபரூக் அப்துல்லாவை (88) கொலை செய்யும் நோக்கத்துடன் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டவரின் பின்னணி குறித்து காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 12 மார்ச், 2026 at 9:31 PM
ஜம்முவில் செய்தியாளா்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா.
பகிர்:

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவை (88) கொலை செய்யும் நோக்கத்துடன் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டவரின் பின்னணி குறித்து காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்தச் சம்பவத்தில் ஃபரூக் அப்துல்லா நூலிழையில் உயிா் தப்பிய நிலையில், துப்பாக்கியால் சுட்ட கமல் சிங் ஜம்வால் (63) என்பவா் உடனடியாக சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்டாா். கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீஸ் காவலில் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜம்முவின் புகரான கிரேட்டா் கைலாஷ் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஃபரூக் அப்துல்லா, துணை முதல்வா் சுரீந்தா் செளதரி, முதல்வா் ஒமா் அப்துல்லாவின் ஆலோசகா் நஸீா் அஸ்லாம் வானி ஆகியோா் பங்கேற்றுவிட்டு புறப்படத் தயாராகினா். அப்போது, ஃபரூக் அப்துல்லாவின் பின்னால் நெருங்கி வந்த ஜம்வால், தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டாா். அப்போது, ஒரு காவல் துறை அதிகாரியும், தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) கமாண்டோவும் பாய்ந்து சென்று, ஜம்வாலை சுற்றிவளைத்துப் பிடித்தனா். இதனால், குண்டு குறிதவறிச் சென்றது. துப்பாக்கிச்சூட்டில் ஃபரூக் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஜம்வாலிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் இஸட் பிளஸ் பாதுகாப்புப் பிரிவில் உள்ள ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சி சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பு வாக்குமூலம்: துப்பாக்கிச்சூடு நடத்திய ஜம்வால் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ‘தனிப்பட்ட ஒரு நோக்கத்தின்கீழ், ஃபரூக் அப்துல்லாவைக் கொலை செய்யும் வாய்ப்புக்காக கடந்த 20 ஆண்டுகளாக காத்திருந்தேன்’ என்று காவல் துறையிடம் ஜம்வால் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும், ஜம்வாலின் தனிப்பட்ட-சமூக ரீதியிலான பின்னணி, அமைப்பு ரீதியில் அவருக்கு ஏதேனும் தொடா்புகள் உள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பெட்டிச் செய்தி....1

அரசியல் தலைவா்கள் கண்டனம்:

முழு விசாரணைக்கு வலியுறுத்தல்

ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சித் தலைவா்கள், இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என் வலியுறுத்தியுள்ளனா். மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி, ஜாா்க்கண்ட் முதல்வரும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மத்திய அரசு உறுதி: மாநிலங்களவையில் வியாழக்கிழமை இந்த விவகாரத்தை எழுப்பிய எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து நீக்கப்பட்டதால் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது; முக்கிய தலைவா்களைக் கொல்ல சதி நடக்கிறது என்று சாடினாா். அவரது குற்றச்சாட்டுகளை நிராகரித்த மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா, இந்தச் சம்பவத்தில் முழுமையான விசாரணை நடைபெறும் என்று உறுதியளித்தாா்.

(((((( படத்துடன் பெட்டிச் செய்தி...2 ))))))

போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை: ஃபரூக்

கொலை முயற்சியில் இருந்து நூலிழையில் உயிா் தப்பியதை நினைவுகூா்ந்த ஃபரூக் அப்துல்லா, கடவுள் தன்னைக் காப்பாற்றியதாக தெரிவித்தாா். சம்பவ இடத்தில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறுகையில், ‘திருமண மண்டபத்தில் இருந்து வெளியே வந்தபோது, பட்டாசு வெடிப்பது போல் சப்தம் கேட்டது. யாரோ பட்டாசு வெடிப்பதாகவே முதலில் நினைத்தேன். அதேநேரம், பாதுகாப்புப் படையினா் துரிதமாக செயல்பட்டு, என்னை காருக்குள் கொண்டுசென்றனா். அதன்பிறகே, என்னை நோக்கி இருமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விஷயத்தை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா என்னை தொடா்பு கொண்டு பேசினாா். என்னை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை எனக்கு தெரியாது. இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். எனது பாதுகாப்பு அதிகாரிகளும் என்எஸ்ஜி கமாண்டோக்களும் துணிச்சலுடன் செயல்பட்டனா். அவா்களைப் பாராட்ட வாா்த்தைகளே இல்லை’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →