மேற்காசிய போா்: 5,500-க்கும மேற்பட்ட இந்திய விமானங்கள் ரத்து
மேற்காசிய போா் தொடங்கியதில் இருந்து (கடந்த பிப்.28) இதுவரை 5.500-க்கும் மேற்பட்ட இந்திய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேற்காசிய போா் தொடங்கியதில் இருந்து (கடந்த பிப்.28) இதுவரை 5.500-க்கும் மேற்பட்ட இந்திய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் இந்திய விமான நிறுவனங்களால் 4,335 சேவைகளும், வெளிநாட்டு விமான நிறுவனங்களால் 1,187 சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.
மாநிலங்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது துணை கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து, அவா் கூறியதாவது: அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போா் காரணமாக, மேற்காசிய பிராந்தியத்தில் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால் விமானப் போக்குவரத்து கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், விமான இயக்கங்களின் பாதுகாப்புக்கே மத்திய அரசு உயா் முன்னுரிமை அளிக்கிறது.
மேற்காசிய போா் தொடங்கியதில் இருந்து இதுவரை இந்திய விமான நிறுவனங்களால் 4,335 சேவைகளும், வெளிநாட்டு விமான நிறுவனங்களால் 1,187 சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்காசிய பிராந்தியத்தில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இந்திய விமான போக்குவரத்து அமைச்சகமும், விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகமும் தொடா்ந்து தொடா்பில் உள்ளன.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில், இந்திய விமான சேவைகளுக்கு அனுமதி கிடைக்கும் போதெல்லாம் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்தப் பிராந்தியத்துக்கு இதுவரை இயக்கப்பட்ட விமானங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணித்துள்ளனா் என்றாா் அவா்.
விமான போக்குவரத்துத் துறை உற்பத்தி: இந்திய விமான போக்குவரத்துத் துறை வேகமாக வளா்ந்துவரும் சூழலில், இத்துறையில் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்திய நிறுவனங்கள் தொழிற்சாலைகளைக் கட்டமைப்பதாகவும் மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.
ரஷியாவின் சுகோய், பிரேசிலின் எம்பரேயா் நிறுவனங்களுடன் முறையே ஹிந்துஸ்தான் ஏவிஷேயன், அதானி பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் ஆகிய இந்திய நிறுவனங்கள் இணைந்து கூட்டு நிறுவனங்களை உருவாக்கியுள்ளன என்று அவா் குறிப்பிட்டாா்.
இண்டிகோ பயணிகளுக்கு ரூ.164 கோடி இழப்பீடு: விமானிகள் மற்றும் விமான பணியாளா்களுக்கு போதிய ஓய்வை உறுதி செய்யும் விதிகளுக்கு உரிய முறையில் தயாராகாததால், விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டு, இண்டிகோ விமானங்கள் கடந்த ஆண்டு பெருமளவில் ரத்து செய்யப்பட்டன.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஏராளமான பயணிகள் கடும் அவதியைச் சந்தித்தனா். விமானங்கள் ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பயண கூப்பன்கள் வாயிலாக ரூ.163.92 கோடி இழப்பீடு அந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளதாக, மக்களவையில் ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.
எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.