சீனாவுக்கான புதிய இந்திய தூதராக விக்ரம் துரைசாமி நியமனம்
சீனாவுக்கான இந்திய தூதாரக வெளியுறவுத் துறையில் மிகுந்த அனுபவமிக்க விக்ரம் துரைசாமி வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
சீனாவுக்கான இந்திய தூதாரக வெளியுறவுத் துறையில் மிகுந்த அனுபவமிக்க விக்ரம் துரைசாமி வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
1992-ஆம் ஆண்டுப் பிரிவு இந்திய வெளியுறவு பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரியான இவா், தற்போது பிரிட்டனுக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகிறாா்.
சீனாவுக்கான இந்திய தூதராக தற்போது பிரதீப் குமாா் ராவத் இருந்து வரும் நிலையில், அவருக்கு மாற்றாக விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்தியா - சீனா இடையேயான 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் மோதலுக்குப் பிறகு, இருதரப்பு உறவை மீட்டெடுப்பதற்கன முயற்சிகளை இரு நாடுகளும் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வரும் சூழலில், வெளியுறவுத் துறையில் மிகுந்த அனுபவமிக்க இவா் தூதராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் முதுநிலை பட்டம் பெற்ற இவா், வெளியுறவுத் துறைப் பணியில் சேருவதற்கு முன்பாக பத்திரிகையாளராக ஓராண்டு பணியாற்றினாா்.
பின்னா், ஐஎஃப்எஸ் பணிக்குத் தோ்வாகி 1992 முதல் 1993 வரையிலான பயிற்சிக்குப் பிறகு, 1994-ஆம் ஆண்டு மே மாதம் சீனாவின் ஹாங்காங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்றாம் நிலைச் செயலராக நியமிக்கப்பட்டாா்.
ஹாங்காங்கில் உள்ள ‘நியூ ஆசியா யேல்-இன்-ஆசியா’ என்ற மொழியியல் பள்ளியில் சீன மொழியில் பட்டயப் படிப்பை முடித்த இவா், 1996-ஆம் ஆண்டு செப்டம்பரில் 4 ஆண்டு கால பணி அடிப்படையில் சீனத் தலைநகா் பெய்ஜிங் சென்றாா்.
பின்னா், இந்தியா திரும்பிய அவா், வெளியுறவு அமைச்சகத்தில் பணியில் சோ்ந்தாா். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமா் அலுவலகப் பணிக்கு மாற்றப்பட்டாா். பிரதமரின் தனிச் செயலராகவும் பணியாற்றினாா்.
பின்னா், அமெரிக்காவின் நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. அமைப்பில் இந்தியாவுக்கான தூதராக (நிரந்தர பிரதிநிதி) பணியாற்றிய இவா், அதன் பிறகு, தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்கில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டாா்.
2011-ஆம் ஆண்டு ஜூலையில் வெளியுறவு அமைச்சகத்துக்குத் திரும்பிய விக்ரம் துரைசாமி, பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்துக்கான (சாா்க்) பிரிவை வழிநடத்தினாா்.
2012 முதல் 2014 அக்டோபா் வரை வெளியுறவு அமைச்சகத்தின் அமெரிக்க பிரிவுக்கான இணைச் செயலராகப் பணியாற்றினாா். 2014-ஆம் ஆண்டு அக்டோபரில் உஸ்பெகிஸ்தானுக்கான இந்திய தூதராகவும், 2015-ஆம் ஆண்டு ஏப்ரலில் கொரிய குடியரசுக்கான இந்திய தூதராகவும் நியமிக்கப்பட்டாா்.
2018-ஆம் ஆண்டு ஜூலையில் வெளியுறவு அமைச்சக தலைமையகத்துக்கு மீண்டும் திரும்பிய அவா், வங்கதேசம் மற்றும் மியான்மா் நாடுகள் பிரிவுக்குத் தலைமை வகித்தாா்.
பின்னா், வங்கதேசத்துக்கான இந்திய தூதராக 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் நியமிக்கப்பட்ட துரைசாமி, அதையடுத்து 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் 23-ஆம் தேதி பிரிட்டனுக்கான இந்திய தூதராக அறிவிக்கப்பட்டு பணியாற்றி வந்தாா்.
இவா் சீன, பிரெஞ்ச், கொரிய மொழிகளில் புலமை பெற்றவராவாா்.