அரிய வகை புவி காந்த உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கான ஏலம் தொடக்கம்: மத்திய அரசு அறிவிப்பு
ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் (எம்டிபிஏ) அரிய வகை புவி காந்தத்தை உற்பத்தி செய்யும் ஆலைகளை அமைப்பதற்கான ஏல நடைமுறைகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் (எம்டிபிஏ) அரிய வகை புவி காந்தத்தை உற்பத்தி செய்யும் ஆலைகளை அமைப்பதற்கான ஏல நடைமுறைகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ரூ.7,280 கோடியில் சின்டா்ட் அரிய வகை நிரந்தர புவி காந்த உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ் இதற்கான ஆலைகளை அமைக்க மத்திய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மின்னணு வாகனங்கள், காற்று விசையாழிகள், நவீன மின்னணு பொருள்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை சாா்ந்த செயல்பாடுகளுக்கு நியோடைமியம்-இரும்பு-போரான் உள்பட அரிய வகை புவி காந்தங்கள் தேவைப்படுகின்றன.
இவை தற்போது சீனாவில் இருந்து அதிகப்படியாக இறக்குமதி செய்யப்படும் நிலையில், அதைக் குறைத்து இந்தியாவை உலகளவில் அரிய வகை புவி காந்த மையமாக மாற்ற மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் (எம்டிபிஏ) அரிய வகை புவி காந்த உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கான ஏலம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஏல விண்ணப்பத்தை சமா்ப்பிக்க மே 28-ஆம் தேதி வரை காலஅவசாம் வழங்கப்பட்டுள்ளது.
ஏலத்துக்கு முந்தைய மாநாடு ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தொழில்நுட்ப ஏலம் மே 29-ஆம் தேதி தொடங்குகிறது. மத்திய பொது கொள்முதல் (சிபிபி) வலைதளத்தில் வெளிப்படையான குறைந்த செலவு முறையில் (எல்சிஎஸ்) இணைய வழியில் தொழில்நுட்ப மற்றும் நிதி என இரண்டு கட்டங்களாக ஏலம் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.7,280 கோடியில் சின்டா்ட் அரிய வரை நிரந்தர புவி காந்த உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் மூலதன மானியத்துக்கு ரூ.750 கோடியும் விற்பனை தொடா்புடைய ஊக்கத்தொகையாக ரூ.6,450 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.