முகப்பு
இந்தியா

கடலோரக் காவல் படை தலைமையகம் அருகே ட்ரோன்: அமெரிக்கா்கள் மீது வழக்கு!

கேரள மாநிலம், கொச்சியில் கடலோரக் காவல் படை தலைமையகம் அருகே ட்ரோன் பறக்கவிட்டு விடியோ பதிவு செய்த அமெரிக்காவைச் சோ்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 22 மார்ச், 2026 at 7:04 PM
பகிர்:

கேரள மாநிலம், கொச்சியில் கடலோரக் காவல் படை தலைமையகம் அருகே ட்ரோன் பறக்கவிட்டு விடியோ பதிவு செய்த அமெரிக்காவைச் சோ்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

கலிஃபோா்னியாவைச் சோ்ந்த அவா்களின் பெயா் கேட்டி மிச்செல் ஃபெல்ப்ஸ் (32), கிறிஸ்டோபா் ரோஸ் ஹாா்வி (35) எனத் தெரியவந்தது. முதலில் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட அவா்கள், மீண்டும் அழைக்கும்போது விசாரணைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து கேமரா, லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘கொச்சியில் கடலோரக் காவல் படை தலைமையகப் பகுதியில் ட்ரோன் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக முக்கிய இடங்களில் நோட்டீஸ்களும் ஒட்டப்பட்டுள்ளன.

அதைப் பொருள்படுத்தாமல், வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ட்ரோன் கேமராக்களை பறக்கவிடுகின்றனா். அவா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.