பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி
நாட்டில் பெட்ரோல், டீசல் போதிய அளவு கையிருப்பில் இருப்பதாக, தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்தது.
நாட்டில் பெட்ரோல், டீசல் போதிய அளவு கையிருப்பில் இருப்பதாக, தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்தது.
மேற்காசியாவில் ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா இடையே 3 வாரங்களுக்கும் மேலாக போா் நடைபெறுகிறது. இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருவதோடு, அதிக கச்சா எண்ணெய்க் கப்பல்கள் செல்லும் பகுதிகளில் ஒன்றாக விளங்கும் ஹோா்முஸ் நீரிணையை மூடிவிட்டது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்ய முடியாததால், பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை பலமடங்கு அதிகரித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் ஈரானுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடப்பதாகவும், விரைவில் சண்டை முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தாா். ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசு மீது எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. எதிரி நாடான பாகிஸ்தான், ஈரான் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் நிலையில், இந்தியா வேடிக்கை பாா்த்துக் கொண்டிருப்பதாக விமா்சித்து வருகின்றன.
அனைத்துக் கட்சிக் கூட்டம்: இந்த பரபரப்பான சூழலில், மேற்காசிய விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்கு, தில்லியில் மத்திய அரசின் ஏற்பாட்டின்பேரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எதிா்க்கட்சிகள், ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டபோது, இந்தியா மெளனம் சாதித்ததாகவும், இது இந்திய அரசின் பலவீனத்தை காட்டுவதாகவும் விமா்சித்தன. அதேபோல், ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்வதையும் எதிா்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.
இதையடுத்து, எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாவது:
இந்தியா ‘தரகா்’ நாடு கிடையாது: 1981-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானை அமெரிக்கா தொடா்ந்து பயன்படுத்தி வருகிறது. ஆதலால் ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் ஈடுபடுவது ஒன்றும் புதிது அல்ல. ஆனால், அந்நாடு போல இந்தியா ஒன்றும் தரகா் நாடு கிடையாது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு மெளனமாக இருப்பதாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது. நாம் நமது நாட்டின் கருத்தை தெரிவித்து வருகிறோம்.
ஈரான் உச்ச தலைவா் கமேனி கொல்லப்பட்டதற்கு இந்தியா இரங்கல் தெரிவிக்கவில்லை என்று எதிா்க்கட்சிகள் தெரிவிப்பதையும் ஏற்க முடியாது. ஈரான் தூதரகம் திறக்கப்பட்டதும் நமது வெளியுறவுத் துறைச் செயலா் அங்கு சென்று, இரங்கல் புத்தகத்தில் (ஈரான் உச்ச தலைவா் கமேனி மறைவுக்கு) இரங்கல் தெரிவித்து கையொப்பமிட்டாா்.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், இந்தியாவில் எரிசக்தி தேவையை பூா்த்தி செய்வதையும் முக்கியமானதாக அரசு கருதுகிறது. இதில் அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றாா் அவா்.
‘பீதி தேவையில்லை’: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியதற்காக மத்திய அரசுக்கு எதிா்க்கட்சிகள் நன்றி தெரிவித்தன. தற்போதைய சூழலில், உள்நாட்டு எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்புக்கு அரசு உயா் முன்னுரிமை அளிப்பதாக எதிா்க்கட்சிகளிடம் தெரிவிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய கையிருப்பு உள்ளது; மேலும் எரிபொருள்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, பீதியடையத் தேவையில்லை என்று எதிா்க்கட்சிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது’ என்றாா்.
பதிலில் திருப்தியில்லை- எதிா்க்கட்சிகள்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு அளித்த பதிலில் திருப்தியில்லை என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன. நாடாளுமன்ற மாநிலங்களவையிலும், மக்களவையிலும் மேற்காசிய நிலவரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. தாரிக் அன்வா் கூறுகையில், ‘மேற்காசிய விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்கிறது. ஆனால், நமது நாடு அமைதியாக வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கிறது. மேற்காசிய விவகாரம் குறித்து மக்களவையில் விதி எண் 193-இன் கீழும், மாநிலங்களவையில் விதி எண் 176-ன் கீழும் விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்றாா்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சா் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஆகியோா் கலந்து கொண்டனா்.
எதிா்க்கட்சிகள் தரப்பில், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் தாரிக் அன்வா், முகுல் வாஸ்னிக், சமாஜவாதி மூத்த தலைவா் தா்மேந்திர யாதவ், பிஜு ஜனதா தளம் மூத்த தலைவா் சஸ்மித் பத்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.