பாஜகவுக்கு தைரியமிருந்தால், நீக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடட்டும்: மமதா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டலை பாஜக வெளியிட வேண்டும் என்று மமதா பானர்ஜி சவால்
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டலை பாஜக வெளியிட வேண்டும் என்று முதல்வர் மமதா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பவானிபூரில் போட்டியிடும் முதல்வர் மமதா பானர்ஜி பிரசாரத்தில் பேசுகையில், "மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படவிருப்பதாக சிலர் கூறுகின்றனர். கரோனா பெருந்தொற்று காலத்தில் என்னால் தேர்தல் நடத்த முடிந்தது. ஆகையால், இப்போதும் என்னால் முடியும்.
இரு நாள்களில் எரிவாயு கிடைக்குமா என்று தெரியவில்லை. நாம் மீண்டும் மாட்டு வண்டியை பயன்படுத்தும் நிலை ஏற்படலாம். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, எரிவாயுவின் விலை என்னவாக இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ரூ. 400-ஆக இருந்தது; ஆனால், இன்று ரூ. 1,100. ரூ. 700 அதிகரித்துள்ளது.
25 நாள் காத்திருப்புக்குப் பின்னர்தான் எரிவாயு கிடைக்கும் என்று சொல்கின்றனர். 25 நாள்கள் காத்திருந்து எரிவாயு கிடைத்தால், பெண்கள் எப்படி சமைப்பார்கள்?
மாநிலத்தில் இறைச்சி சாப்பிட முடியாது, முட்டை சாப்பிட முடியாது, பெங்காலி பேச முடியாது. பெங்காலி பேசினால், அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டு, கைது செய்யப்படுவர். சித்திரவதை செய்யப்படுவர்; அவர்களின் பெயர்களும் அகற்றப்படும். இதற்காக எந்த அரசியல் கட்சியும் போராடவில்லை.
தெருக்களில் இருந்து நீதிமன்றம்வரையில் நான் மட்டுமே போராடினேன். யாருடைய பெயரெல்லாம் நீக்கப்பட்டது என்று இன்றுவரையில் தெரியவில்லை. பாஜகவுக்கு தைரியமிருந்தால், நீக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடட்டும்" என்று தெரிவித்தார்.