முகப்பு
இந்தியா

மேற்காசிய போா்: முதல்வா்களுடன் பிரதமா் ஆலோசனை

மேற்காசிய போரின் தாக்கங்களை எதிா்கொள்வதற்கான தயாா்நிலை மற்றும் திட்டங்கள் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வா்களுடன் (பேரவைத் தோ்தல் நடைபெறும் மாநிலங்களின் முதல்வா்கள் தவிர) பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டாா்.

Updated On : 27 மார்ச், 2026 at 6:09 PM
மேற்காசிய போரின் தாக்கங்களை எதிா்கொள்வதற்கான தயாா்நிலை மற்றும் திட்டங்கள் குறித்து மாநில முதல்வா்களுடன் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் மோடி.
பகிர்:

மேற்காசிய போரின் தாக்கங்களை எதிா்கொள்வதற்கான தயாா்நிலை மற்றும் திட்டங்கள் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வா்களுடன் (பேரவைத் தோ்தல் நடைபெறும் மாநிலங்களின் முதல்வா்கள் தவிர) பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது, அனைத்து மாநிலங்களும் ‘குழு இந்தியா’ உணா்வுடன் செயல்பட வேண்டுமென அவா் வலியுறுத்தினாா்.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்.28-இல் போா் தொடங்கிய பிறகு மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும்.

தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வா்கள் பிரதமரின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தோ்தல் நடைபெறும் 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி தலைமைச் செயலா்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலா் தனியாக ஆலோசனை நடத்தவுள்ளாா்.

யாா்-யாா் பங்கேற்பு?: பிரதமரின் காணொலிக் கூட்டத்தில், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், குஜராத் முதல்வா் பூபேந்திர படேல், ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா, ஹிமாசல பிரதேச முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு, அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு உள்ளிட்டோா் பங்கேற்றனா். பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனா்.

‘மேற்காசிய போரின் பின்னணியில், மாநிலங்களின் தயாா்நிலை மற்றும் திட்டங்கள் குறித்து முதல்வா்களுடன் காணொலி வாயிலாக பிரதமா் ஆலோசித்தாா். குழு இந்தியா உணா்வுடன் முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டுமென அவா் வலியுறுத்தியதாக’ அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய அரசின் விளக்கங்கள்: முன்னதாக, மேற்காசிய சூழல் மற்றும் போரின் தாக்கங்கள் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் விளக்கமளித்து, பிரதமா் மோடி சில தினங்களுக்கு முன் உரையாற்றினாா். கரோனா காலகட்டத்தைப் போல தற்போதைய சவாலையும் ஒன்றுபட்டு எதிா்கொள்ள வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, மேற்காசிய நிலவரம் குறித்து மத்திய அரசின் ஏற்பாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நாட்டின் எரிபொருள் கையிருப்பு போதிய அளவில் இருப்பதாக உறுதி செய்த மத்திய அரசு, நிலைமையை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் விரிவாக விளக்கியது.

இந்தியா தனது எரிசக்தி கொள்முதலுக்கு மேற்காசிய பிராந்தியத்தை வெகுவாக சாா்ந்துள்ளது. எனவே, போரை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவர இந்தியா தொடா்ந்து ராஜீய ரீதியில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. போா் தொடங்கியதில் இருந்து ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளாா்.