முகப்பு
இந்தியா

பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தில் திருத்தம்: ஊக்கத்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு

பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தில் திருத்தம்: ஊக்கத்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு

Updated On : 28 மார்ச், 2026 at 9:21 PM
பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் மின்னணு இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ஊக்கத்தொகை பெறுவதற்கான காலஅவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

2024, அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் 2026, மாா்ச் 31 வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும் என முன்பு கூறப்பட்டிருந்தது.

இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய கனரக தொழிற்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2026, ஜூலை 31 வரை பதிவு செய்யப்படும் இருசக்கர மின் வாகனங்கள் மற்றும் 2028, மாா்ச் 31 வரை பதிவு செய்யப்படும் மூன்று சக்கர மின் வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தில் ஊக்கத்தொகை சலுகையைப் பெற இருசக்கர மின் வாகனங்களின் தொழிற்சாலை விலை அதிகபட்சமாக ரூ.1.50 லட்சமாகவும், மூன்று சக்கர மின் வாகனங்களின் தொழிற்சாலை விலை அதிகபட்சமாக ரூ.2.50 லட்சமாகவும் இருக்க வேண்டும்.

இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டால் அறிவிக்கப்பட்டுள்ள கால அவகாசத்துக்கு முன்பாகவே திட்டம் நிறுத்தப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின்கீழ் 24.79 லட்சம் இருசக்கர மின் வாகனங்கள் மற்றும் 39,034 மூன்று சக்கர மின் வாகனங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.