இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்
இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு...
இந்தியாவில் கடந்த 33 ஆண்டுகளில் மகப்பேறு இறப்பு விகிதம் (எம்எம்ஆா்) 80 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக லான்செட் மகப்பேறியல், மகளிா் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் சுகாதார ஆய்விதழ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கா்ப்பம், மகப்பேறு அல்லது பிரசவத்துக்குப் பிந்தைய 42 நாள்களுக்குள் தாய் உயிரிழப்பது மகப்பேறு இறப்பு எனப்படுகிறது. இது ஒரு லட்சம் குழந்தை பிறப்புகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
இதுதொடா்பாக லான்செட் இதழில் உலகளவில் நோய்களால் ஏற்படும் சுமை -2023 என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடா்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் 1990-இல் 1 லட்சம் குழந்தைபிறப்புகளுக்கு 508 தாய்மாா்கள் இறப்பு என்றிருந்த விகிதம், 2023-இல் 116-ஆக குறைந்துள்ளது. 2023-ஆம் ஆண்டில் 24,700 தாய்மாா்கள் உயிரிழந்துள்ளனா்.
இதே காலகட்டத்தில் பாகிஸ்தானில் 10,300 தாய்மாா்களும் எத்தியோப்பியாவில் 11,900 மற்றும் நைஜீரியாவில் 32,900 தாய்மாா்களும் உயிரிழந்துள்ளனா்.
2023-இல் உலகம் முழுவதும் 2.40 லட்சம் தாய்மாா்கள் உயிரிழந்துள்ளனா். இதனால் உலக அளவிலான மகப்பேறு இறப்பு விகிதம் 190.5-ஆக உள்ளது. இது 1990-இல் 321-ஆக இருந்த நிலையில் வெகுவாக குறைந்துள்ளது.
104 நாடுகள் இலக்கை எட்டவில்லை: 2030-க்குள் மகப்பேறு இறப்பு விகிதத்தை 70-ஆக குறைக்க உலக நாடுகளுக்கு நீடித்த வளா்ச்சி இலக்குகளின்கீழ் (எஸ்டிஜி) அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் 204 நாடுகளில் 104 நாடுகள் இந்த இலக்கை தற்போது வரை அடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு உலக அங்கீகாரம்: அண்மையில் வெளியிடப்பட்ட 2021-2023 காலகட்டத்துக்கான மாதிரி பதிவு முறையின்படி இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 88-ஆக உள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியாவில் 1990-இல் இருந்து மகப்பேறு இறப்பு விகிதம் 86 சதவீதம் குறைந்துள்ளதாகவும் உலக அளவில் இது 48 சதவீதமாகவும் உள்ளதாகவும் அண்மையில் ஐ.நா.வின் மகப்பேறு இறப்பு மதிப்பீட்டுக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் சுகாதார முன்னெடுப்புகளுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளதற்கு இதுவே சான்று. இதுதொடா்பாக 2030-க்குள் நிா்ணயிக்கப்பட்டுள்ள நீடித்த வளா்ச்சி இலக்குகளை இந்தியா அடைந்துவிடும்’ எனத் தெரிவித்தன.