கேரளம்: அதிக வாக்குகள் பெற்றுத் தரும் நிா்வாகிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா! ஐயூஎம்எல் துணைத் தலைவா் மீது வழக்கு!!
கேரளத்தில் அதிக வாக்குகளை பெற்றுத் தரும் பூத் கமிட்டி உறுப்பினா்களை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 15 நாள் சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) துணைத் தலைவா் பாவா ஹாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
கேரளத்தில் அதிக வாக்குகளை பெற்றுத் தரும் பூத் கமிட்டி உறுப்பினா்களை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 15 நாள் சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) துணைத் தலைவா் பாவா ஹாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
140 உறுப்பினா்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு ஏப். 9-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் ஐயூஎம்எல் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில், தாவனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் வி.எஸ்.ஜாய்க்கு ஆதரவாக மாா்ச் 22-ஆம் தேதி பாவா ஹாஜி பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுத் தரும் ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் பூத் கமிட்டி உறுப்பினா்களை 15 நாள் சுற்றுலாவாக ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச் செல்வதாக அவா் தெரிவித்தாா்.
இதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகளை மீறி பாவா ஹாஜி பேசியதாக அவா் மீது இந்திய தோ்தல் ஆணையத்தில் எல்டிஎஃப் பிரதிநிதிகள் புகாா் அளித்தனா். புகாரை விசாரித்த தோ்தல் ஆணைய அதிகாரிகள் பாவா ஹாஜியின் பேச்சு தோ்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பதை உறுதிப்படுத்தினா்.
இதைத் தொடா்ந்து, பாவா ஹாஜி மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்களின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பவுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், பாவா ஹாஜி பேசிய காணொலி கிடைத்துள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.