முகப்பு
இந்தியா

மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கடைப்பிடிக்கும் காங்கிரஸ்: ஃபட்னவீஸ்!

ஜோர்ஹாட் தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதாரித்து முதல்வர் ஃபட்னவீஸ் உரை..

Updated On : 31 மார்ச், 2026 at 10:33 AM
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் - DPS
பகிர்:

அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான அரசு, மாநிலத்தின் வளர்ச்சியை உறுதி செய்தது மட்டுமல்லாமல், அதன் அடையாளத்தைப் பாதுகாத்துள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

ஜோர்ஹாட் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹிதேந்திர நாத் கோஸ்வாமிக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் பட்னவீஸ் உரையாற்றினார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஊடுருவல் மிகவும் தீவிரமாக இருந்தது. மக்கள் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அதில் ஏராளமானோர் உயிர்த்தியாகம் செய்தனர். ஆனால் ஊடுருவல் நிற்கவில்லை. மாநிலம் முழுவதும் பற்றி எரிந்தது. இதன் விளைவாக மக்கள் தொகையில் மாற்றத்தை எதிர்கொள்ளும் அபாயத்திலிருந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்ததும் நிலைமை மாறியது.

ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் செயல்பட்டு வந்த அனைத்து தீவிரவாதக் குழுக்களும் தற்போது சரணடைந்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் மாநிலத்தின் மக்கள் தொகையை மாறியிருக்கும், அஸ்ஸாமின் வரலாறு மாற்றியமைக்கப்பட்டிருக்கும்.

மோடி அரசு வெறும் வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல், மாநிலத்தின் அடையாளம், கலாசாரம், வரலாறு மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதிலும் செயல்படுகிறது.

பாஜக தலைமையிலான அரசு மாநிலத்திற்குப் பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு வளர்ச்சியை உறுதி செய்தது. ஜாகிரோட்டில் அமையவுள்ள டாடா குழுமத்தின் குறைக்கடத்தி உற்பத்தி நிலையத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பட்னவீஸ், இது அஸ்ஸாமிற்கு பிரதமர் மோடி அளித்த பரிசாகும். இது மாநிலத்தை உலக வரைபடத்தில் முக்கிய இடத்திற்கு உயர்த்தும்.

குறைக்கடத்திகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நாடுகள் எதிர்காலத்தில் உலக அளவில் முன்னணியில் திகழும், அத்தகைய உயர்நிலை நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியை விமர்சித்த ஃபட்னவீஸ், வடகிழக்குப் பிராந்தியத்தின் மீது அக்கட்சி மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கடைப்பிடித்து வருகின்றது. இதன் காரணமாகவே போதிய வளர்ச்சியை எட்டாமல், அமைதியின்மையால் சூழப்பட்டிருக்கிறது.

சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் கிடைப்பது குறித்துத் தவறான கருத்துகளை எழுப்பி, மக்களிடையே அதிருப்தியை உருவாக்கி வருகின்றது.

நாங்களும் எதிர்க்கட்சியாக இருந்திருக்கிறோம்; ஆனால், ஒருபோதும் இத்தகைய அவமானகரமான முறையில் நடந்துகொண்டதில்லை.

ஜோர்ஹாட் தொகுதியில் எதிர்க்கட்சியின் வேட்பாளராக மாநில காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் போட்டியிடுகிறார். கோகோய், மக்களவையில் எதிர்க்கட்சியின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Maharashtra Chief Minister Devendra Fadnavis on Tuesday said the BJP-led government in Assam has not only ensured the state's development but also protected its identity.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.