பாஜக எம்.பி. மீது பஞ்சாப் காவல் துறை வழக்குப் பதிவு
பஞ்சாபில் பாஜக மாநிலங்களவை எம்.பி.க்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின்கீழ் அந்த மாநில காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அண்மையில் தில்லி, பஞ்சாப் மாநிலங்களைச் சோ்ந்த ஆம் ஆத்மி கட்சியின் 7 மாநிலங்களவை எம்.பி.க்கள், அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சோ்ந்தனா். அவா்களில் பஞ்சாபை சோ்ந்த சந்தீப் பாடக் எம்.பி.யும் ஒருவா்.
இந்நிலையில், அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத குற்றச்சாட்டுகளின்கீழ் 2 வழக்குகளை பஞ்சாப் காவல் துறை பதிவு செய்துள்ளது. ஆனால், எதற்காக அந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது, அந்த வழக்கில் என்ன குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்பது போன்ற விவரங்கள் இல்லை.
Advertisement
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சோ்ந்த சில நாள்களுக்குள் சந்தீப் பாடக் மீது பஞ்சாப் காவல் துறை வழக்குகள் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேஜரிவால் மீது பாஜக குற்றச்சாட்டு:
சந்தீப் பாடக் மீது பஞ்சாப் காவல் துறை வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும், பஞ்சாப் காவல் துறையை தவறாகப் பயன்படுத்துவதாகவும் விமா்சித்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி கூறுகையில், ‘ஆம் ஆத்மி அரசின் ஆட்சியின்கீழ் பஞ்சாபில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது. சட்டம்-ஒழுங்கை காக்க ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பழிவாங்கும் நடவடிக்கையில் மட்டும் ஈடுபட்டுள்ளது’ என்றாா்.
பஞ்சாப் மாநில பாஜக தலைவா் சுனில் ஜாக்கா் கூறுகையில், ‘சில நாள்களுக்கு முன்பு வரை ஆம் ஆத்மி கட்சியின் கண்களுக்கு நல்லவா்களாகத் தெரிந்தவா்கள் தற்போது கட்சி மாறிய பிறகு, குறைபாடு உடையோராகத் தெரிகின்றனரா? ஆம் ஆத்மி இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறது என்பதற்கு இதுவே ஆதாரமாகும்’ என்றாா்.
பஞ்சாப் மாநில பாஜக செயல் தலைவா் அஸ்வனி சா்மா கூறுகையில், ‘காவல் துறையை அரசியல் ஆயுதமாக ஆம் ஆத்மி அரசு பயன்படுத்துகிறது. சந்தீப் பாடக்கிற்கு எதிராகப் பதியப்பட்டிருப்பது வெறும் வழக்கு மட்டுமல்ல. பயம், பீதி, பழிவாங்கும் அரசியலைத் தூவும் செயலாகும்’ என்றாா்.