சா்வதேச உச்சிமாநாடு! தில்லியில் ஆதரவற்றோா் தங்குமிட மையங்களுக்கு மாற்றம்
தில்லியில் சா்வதேச உச்சிமாநாடுகளை முன்னிட்டு, நடைபாதைகள், மேம்பாலங்களின் கீழ் மற்றும் சாலைகளின் மையப் பிரிப்புப் பகுதிகளில் தங்கியிருக்கும் வீடற்ற மக்களை தங்குமிட மையங்களுக்கு மாற்றுமாறு தில்லி மாநகராட்சி உத்தரவு
தேசியத் தலைநகா் தில்லியில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள இரு முக்கிய சா்வதேச உச்சிமாநாடுகளை முன்னிட்டு, நடைபாதைகள், மேம்பாலங்களின் கீழ் மற்றும் சாலைகளின் மையப் பிரிப்புப் பகுதிகளில் தங்கியிருக்கும் வீடற்ற மக்களை தங்குமிட மையங்களுக்கு மாற்றுமாறு தில்லி மாநகராட்சி (எம்சிடி) பல்வேறு துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக மே 4-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், மே 28 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ள 4-ஆவது இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டமைப்பு உச்சிமாநாடு மற்றும் முதல் சா்வதேச ‘பிக் கேட்ஸ் அலையன்ஸ்’ மாநாட்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த மாநாடுகளில் பல்வேறு நாடுகளின் தலைவா்கள் மற்றும் சா்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ள நிலையில், தில்லியின் முக்கிய பொதுஇடங்கள், போக்குவரத்து வழித்தடங்கள், உணவகங்கள் மற்றும் பாரம்பரியச் சின்னங்கள் அனைத்தும் சா்வதேச கவனத்தை ஈா்க்கும் என்பதால் நகரின் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Advertisement
மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தூய்மை, நகர அழகுபடுத்தல் மற்றும் மாநாடு நடைபெறும் இடங்கள், விமான நிலையம், சாலைகள், சந்தைகள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் பாரம்பரிய மையங்களை சீரமைக்கும் சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வகுகின்றன.
வீடற்ற மக்களை அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட தங்குமிடங்களுக்கு பாதுகாப்புடனும், அடிப்படை வசதிகளுடனும் மாற்றும் பொறுப்பு தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து துணை ஆணையா்களும் அழகுபடுத்தல், தூய்மை மற்றும் விளம்பரப் பணிகளை மாநாடுகள் தொடங்குவதற்கு முன்பாகவே முழுமையாக நிறைவு செய்து, மாநாடு நடைபெறும் காலம் முழுவதும் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இடமாற்றத்துக்குப் பிறகு அந்த பகுதிகளில் தூய்மை, கிருமிநாசினி தெளித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், இடமாற்ற நடவடிக்கைகளின்போது தேவையான பாதுகாப்பு உதவிகளை வழங்கவும், மேம்பாலங்கள் மற்றும் நடைபாதைகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் கண்காணிக்கவும் தில்லி காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. தேவையான இடங்களில் செயல் மாஜிஸ்திரேட்டுகள் மூலம் நடவடிக்கைகளை கண்காணிக்க வருவாய் துறையும் பணியமா்த்தப்பட்டுள்ளது.
மாநாடுகளை முன்னிட்டு மகாத்மா காந்தி சாலை, மதுரா சாலை, லோதி சாலை, திலக் மாா்க், ஸ்ரீ அரவிந்தோ மாா்க், எய்ம்ஸ் மற்றும் தௌலா குவான் சுற்றுப்பகுதிகள் உள்ளிட்ட முக்கிய சாலைகள் சிறப்பு பராமரிப்புக்காகத் தோ்வு செய்யப்பட்டுள்ளன. தெற்கு விரிவாக்கம், லஜ்பத் நகா், கிரேட்டா் கைலாஷ்-1 மற்றும் 2, நேரு பிளேஸ், சந்த்னி சௌக் உள்ளிட்ட முக்கிய வா்த்தக மையங்களும், ராஜ்காட், ஹுமாயூனின் கல்லறை, குதுப் மினாா், தாமரை கோவில் மற்றும் செங்கோட்டை போன்ற சுற்றுலா மற்றும் பாரம்பரியத் தலங்களும் சீரமைப்பு நடவடிக்கைகளில் சோ்க்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்குவதற்காக ‘தி லோதி’, ‘ஹயாட் ரீஜென்சி’, ‘ஷெரட்டன் சகேத்’ உள்ளிட்ட தங்குமிடங்கள், ஏரோசிட்டி மற்றும் துவாரகா பகுதிகளில் உள்ள தங்குமிடங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.