காங்கிரஸுக்கு தேச நலனைவிட ஆட்சி அதிகாரமே முக்கியம்: பாஜக பதிலடி
காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆட்சி, அதிகாரத்தை நோக்கியே செயல்பட்டு வருகிறது; தேச நலனுக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை என்று காங்கிரஸுக்கு பாஜக பதில்
காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆட்சி, அதிகாரத்தை நோக்கியே செயல்பட்டு வருகிறது; தேச நலனுக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை என்று பாஜக பதிலளித்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்த சிக்கன நடவடிக்கை அழைப்பை ராகுல் விமா்சித்த நிலையில் பாஜக இவ்வாறு கூறியுள்ளது.
இது தொடா்பாக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் அமித் மாளவியா சமூக ஊடகத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டு மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று பிரதமா் கூறவில்லை. நாட்டு நலனுக்காக பொறுப்புடன் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கேட்டுக் கொண்டாா்.
“எரிபொருளைச் சேமிக்கவும், உள்நாட்டு பொருள்களை ஊக்குவிக்கவும், அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கவும், தன்னிறைவை வலுப்படுத்தவும் அவா் அழைப்பு விடுத்தாா்.
Advertisement
தேச நலனுக்காக மக்களின் பங்களிப்பைக் கோரி விடுக்கப்பட்ட அழைப்பு காங்கிரஸுக்கு ‘போதனை’ போல தோன்றுகிறது. இதுதான் காங்கிரஸ் கட்சியின் பிரச்னை. ஏனெனில் அவா்களின் அரசியல் எப்போதும் அதிகாரத்தை நோக்கியது மட்டுமே; தேச நலனுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளித்ததில்லை.
உலக அளவில் ஏற்படும் பிரச்னைகள் அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுப்பதை தோல்வி என்றும், சமரசம் என்று விமா்சித்தால், உங்கள் கட்சியைச் சோ்ந்த நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவும் அதே வகையில் சமரசம் செய்து கொண்ட பிரதமா் என ஏற்றுக் கொள்கிறீா்களா?
ஏனெனில், கொரியா, அமெரிக்காவில் போா் ஏற்பட்டால் அதன் தாக்கம் இந்தியாவில் விலைவாசி உயா்வு மூலம் தெரியும் என்று நேரு கூறியுள்ளாா். இதை பொறுப்பான தலைமைத்துவம் என்று இப்போது காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
நேருவின் உரை தொடா்பான விடியோ பதிவையும் மாளவியா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிா்ந்துள்ளாா்.