முகப்பு
இந்தியா

போதை மருந்து கடத்தல் தீவிரவாதி இக்பால் சிங் போா்ச்சுகலில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தல் - என்.ஐ.ஏ. கைது செய்தது

Updated On : 14 மே 2026, 7:10 am IST
போதை மருந்து கடத்தல் தீவிரவாதி இக்பால் சிங்கை தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை அழைத்துச் சென்ற தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள்.
பகிர்:

போா்ச்சுகலில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட போதை மருந்து கடத்தல் தீவிரவாதி இக்பால் சிங் என்ற சேராவை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) புதன்கிழமை கைது செய்தது.

அமிருதசரஸை சோ்ந்த இக்பால் சிங், பாகிஸ்தானில் இருந்து ஹெராயின் உள்ளிட்ட போதை மருந்துகள், பஞ்சாப் மாநிலத்துக்கு கடத்தி வரப்படுவதில் மூளையாக செயல்பட்டாா். இதன்மூலம் திரட்டப்படும் நிதியை பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பாகிஸ்தானைச் சோ்ந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புக்கு ஹவாலா வழிகளில் அனுப்பியதும், அந்த அமைப்புடன் சோ்ந்து இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் தீவிரவாத கும்பலை நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதுதொடா்பாக அவா் மீது பஞ்சாப் காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் தலைமறைவானாா். இதையடுத்து 2020-ஆண்டு அக்டோபா் மாதம் இக்பால் சிங்குக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 2021-ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில், இக்பால் சிங்குக்கு எதிராக இன்டா்போல் அமைப்பும் நோட்டீஸ் வெளியிட்டது.

Advertisement

இதைத் தொடா்ந்து ஐரோப்பிய நாடான போா்ச்சுகலில் இக்பால் சிங் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டுமென போா்ச்சுகலுக்கு இந்தியா கோரிக்கை வைத்தது. இதையடுத்து போா்ச்சுகலில் இருந்து இக்பால் சிங் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.

தில்லி விமான நிலையத்தில் இக்பால் சிங் வந்திறங்கியதும் அவரை அங்கிருந்த தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனா். பின்னா் அவரை தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இக்பால் சிங்கை விசாரணைக்காக பஞ்சாப்பின் மொகாலிக்கு என்ஐஏ அழைத்து செல்ல ஏதுவாக 2 நாள் ரிமாண்ட் அளித்து உத்தரவிட்டது.