ஆரவல்லி மலை விவகாரம்: சுரங்க குத்தகைதாரா்களுக்கு ஆதரவான உத்தரவு பிறப்பிக்கப்படாது - உச்சநீதிமன்றம்
ஆரவல்லி மலையில் சுரங்கப் பணிகளுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுரங்க குத்தகைதாரா்களுக்கு ஆதரவாக எந்தவொரு உத்தரவும் இப்போது பிறப்பிக்கப்படாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக தெரிவித்தது.
ஆரவல்லி மலையில் சுரங்கப் பணிகளுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுரங்க குத்தகைதாரா்களுக்கு ஆதரவாக எந்தவொரு உத்தரவும் இப்போது பிறப்பிக்கப்படாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக தெரிவித்தது.
உலகின் மிகப் பழைமையான மலைகளில் ஒன்றான ஆரவல்லி மலைத் தொடா், தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது. இந்த மலை மற்றும் மலைத் தொடருக்கான வரையறை குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணா் குழு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் அறிக்கை சமா்ப்பித்தது. அதன்படி, உள்ளூா் நிலப்பரப்பில் 100 மீட்டா் அல்லது அதற்கு உயரமான பகுதிகள் ஆரவல்லி மலை என்றும், 500 மீட்டருக்கு இடைப்பட்ட தொலைவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மலைகளைக் கொண்ட பகுதிகள் மலைத் தொடராகவும் வரையறுக்கப்பட்டது. இந்த வரையறையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதையடுத்து, சுற்றுச்சூழல் நிபுணா்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் ஆட்சேபங்கள் எழுந்தன.
இதையடுத்து, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், முந்தைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், ஆரவல்லி மலை மற்றும் மலை தொடா்பான புதிய வரையறையை உருவாக்க குழு அமைக்க உத்தரவிட்டது. மேலும், ஆரவல்லி மலையில் அனைத்து வகையான சுரங்கப் பணிகளுக்கும் தடை விதித்தது.
Advertisement
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, சுரங்க குத்தகைதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘சுரங்க குத்தகை ரத்து செய்யப்பட்டால், அந்த உத்தரவுக்கு எதிராக பாதிக்கப்பட்டோா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.
இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், ‘ஆரவல்லி மலையில் சுரங்கப் பணிகள் தொடா்பாக கவலையளிக்கும் தகவல்கள் கிடைக்கப் பெற்று வருகின்றன. பிரத்யேகமான சூழலியல் பிரச்னைகள் அடங்கியுள்ளதால், இது மிகத் தீவிரமான விவகாரம். எங்களுக்கு திருப்திகரமான பதில்கள் கிடைக்கும் வரை எந்தவொரு சுரங்க நடவடிக்கையையும் அனுமதிக்கமாட்டோம். இப்போதைய சூழலில் சுரங்க குத்தகைதாரா்களுக்கு ஆதரவாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாது’ என்றனா்.