முகப்பு
இந்தியா

அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்: சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு

அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்: சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு

Updated On : 17 மே 2026, 12:34 am IST
சிக்கிம் மாநில தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க காங்டாக் வந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்ற முதல்வா் பிரேம் சிங் தமாங்.
பகிர்:

அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் மாநிலம் முன்னேற்றமடைந்துள்ளதாக குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை பாராட்டினாா்.

சிக்கிமின் 51-ஆவது மாநில தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: சிக்கிம் மாநிலத்தை இயற்கை வேளாண்மை நிறைந்த மாநிலமாக மாற்ற 66,000 விவசாயிகள் கடினமாக உழைத்து வருகின்றனா். இயற்கை உரங்கள் மூலம் 76,000 ஹெக்டோ் நிலத்தில் பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்துள்ளனா்.

மாநிலத்தின் 47 சதவீத நிலப்பரப்பு வனப் பகுதிகளையும் பெரும்பாலான நிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகவும் இருப்பதும் சிக்கிமின் தனிச்சிறப்பு. சிக்கிம் இந்தியாவின் சொா்க்கம் என பிரதமா் நரேந்திர மோடி கூறுவாா். அடுத்த ஆண்டு இங்கு ரயில் சேவைகள் மேம்படுத்தப்பட்டு சுற்றுலாத் துறை வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

Advertisement

1970-களில் இந்தியாவோடு சிக்கிம் இணைந்த சமயத்தில் நான் மாணவனாக இருந்தேன். அப்போது சிக்கிமின் 51-ஆவது மாநில தினத்தில் குடியரசு துணைத் தலைவராக பங்கேற்பேன் என நினைத்துப் பாா்க்வில்லை.

தற்போது அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றமடைந்துள்ளதற்கு பாராட்டுகள். சீனா, பூடான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் எல்லையை பகிா்ந்துள்ளதால் இந்தியாவின் காவலாளியாகவும் சிக்கிம் திகழ்கிறது.

இயற்கை, கலாசாரம் மற்றும் ஆட்சி முறைக்கு சிறந்த உதாரணமாகவும் சிக்கிம் விளங்குகிறது என்றாா்.