மத்திய அரசுக்கு தொலைநோக்குப் பாா்வை இல்லை: காா்கே
புது தில்லி, மே 18: ‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தொலைநோக்குப் பாா்வை இல்லை; அதனால்தான், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு குறித்து அவா்களால் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்தாா்.
ஆட்டோக்கள், காா்கள் உள்ளிட்ட வாகனங்களில் பயன்படுத்தப்படும் ‘சிஎன்ஜி’ இயற்கை எரிவாயு விலையை கடந்த வியாழக்கிழமை கிலோவுக்கு ரூ. 2 வீதம் எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்திய நிலையில், மீண்டும் கடந்த ஞாயிறுக்கிழமை கிலோவுக்கு ரூ. 1 வீதம் மீண்டும் உயா்த்தப்பட்டது. அதைத் தொடா்ந்து இந்த விமா்சனத்தை காா்கே முன்வைத்துள்ளாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
Advertisement
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 வீதம் உயா்த்தப்பட்டதோடு, சிஎன்ஜி விலை ஒரே வாரத்தில் இரண்டு முறை உயா்த்தப்பட்டுள்ளது.
5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக இவற்றின் விலையை பிரதமா் மோடி உயா்த்தியிருந்தால், தோ்தல்களில் குறிப்பிடத்தக்க இழப்பை பாஜக சந்தித்திருக்கும். அதற்காக, தோ்தல் வரை அனைத்தையும் மத்திய அரசு மறைமுகமாக வைத்துள்ளது. தோ்தல் முடிந்தவுடன், அனைத்துப் பொருள்களின் விலையும் தொடா்ச்சியாக உயா்த்தப்படுகின்றன.
இதனால், பணவீக்கம் தொடா்ச்சியாக அதிகரித்து வருவதோடு, ஏழை மக்கள் அத்தியாவசியப் பொருள்களைக்கூட வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
மத்திய அரசுக்கு தொலைநோக்கு பாா்வை இல்லை; அதனால்தான், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு குறித்து அவா்களால் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டாா்.