கேரளத்தில் சில்வர்லைன் அதிவேக ரயில் வழித்தடத் திட்டம் ரத்து: முதல்வர் சதீசன்
திருவனந்தபுரம் - காசர்கோடு இடையேயான அதிவேக ரயில் வழித்தடத் திட்டத்தை மாநில அரசு ரத்தாக்கியுள்ளது.
திருவனந்தபுரம் : கேரளத்தில் சில்வர்லைன் அதிவேக ரயில் வழித்தடத் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அம்மாநில முதல்வர் வி. டி. சதீசன் புதன்கிழமை(மே 20) அறிவித்தார்.
இது குறித்து, இன்று செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது :
“திருவனந்தபுரம் - காசர்கோடு இடையேயான அதிவேக ரயில் வழித்தடத் திட்டமான சில்வர்லைன் திட்டத்தை மாநில அமைச்சரவை ரத்தாக்கியுள்ளது. கைவிடப்பட்ட இத்திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் இத்திட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆகவே, இத்திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அனைத்து அறிவிக்கைகளும் திரும்பப் பெறப்படும் என்றும்” குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
மேலும், “இத்திட்டத்துக்கு எதிப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்து உள்துறை அமைச்சகம் சட்ட வழிகளை ஆய்வு செய்து அவற்றை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றார்.
ஐக்கிய ஜனநாயக முன்னணியான யு.டி.எஃப்., அதிவேக ரயில் பாதை திட்டத்துக்கு எதிராக இல்லை என்றும் ஆனால், இத்திட்டமானது கேரளத்தில் சுற்றுச்சூழல் மற்றும் நிதிச்சுமை விளைவிக்கக்கூடும் என்பதால் திட்டத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். இத்திட்டம் குறித்து விரிவானதொரு திட்ட அறிக்கையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
“ஒருவேளை, இத்திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தால், சுற்றுச்சூழல் பேரழிவாக அமைந்திருக்கும். அதிலும் குறிப்பாக, பருவமழைக் காலங்களில் சுற்றுச்சூழல் அழிவை விளைவிக்குமொரு திட்டமாக அமைந்திருக்கும். இதுவொரு நிலைத்தன்மையான திட்டம் அல்ல.
வல்லுனர்கள் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னரே இத்திட்டம் நடைமுறைக்கு ஒத்து வராது என்ற முடிவை யு.டி.எஃப். எடுத்ததாகவும்” தெரிவித்தார்.
2031-க்குள் இந்த ஆட்சிக்காலம் முடிவடைவதற்குள் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இத்திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள குறியீடுகளையும் அகற்ற வருவாய்த்துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் சதீசன் தெரிவித்தார்.