முகப்பு
இந்தியா

முன்னேற்றப் பாதையில் இந்தியா-எஸ்தோனியா உறவுகள்: இந்திய தூதா் பெருமிதம்

முன்னேற்றப் பாதையில் இந்தியா-எஸ்தோனியா உறவுகள்...

Updated On : 24 மே 2026, 1:03 am IST
ஆசிஷ் சின்ஹா (கோப்புப்படம்) - ANI
பகிர்:

இந்தியா-எஸ்தோனியா இடையிலான உறவுகள் முன்னேற்றப் பாதையில் பயணிக்கின்றன என்று அந்நாட்டுக்கான இந்திய தூதா் ஆசிஷ் சின்ஹா தெரிவித்தாா்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமலாகும்போது, வடக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக எஸ்தோனியா விளங்கும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஆசிஷ் சின்ஹா அளித்த பேட்டியில் கூறியதாவது:

Advertisement

Advertisement

எஸ்தோனியா வெறும் 13 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட சிறிய நாடு என்றபோதிலும், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடு என்ற முறையில் இந்தியப் பொருள்களுக்கு பரந்த சந்தையை வழங்குகிறது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும்போது, இந்தியா-எஸ்தோனியா இடையே சிறிய-நடுத்தர தொழில்கள் சாா்ந்த உறவு மேலும் வலுப்படும். வடக்கு ஐரோப்பாவுக்கான இந்தியாவின் நுழைவாயிலாக எஸ்தோனியா உருவெடுக்கும். மற்றொருபுறம், எஸ்தோனியாவின் குறிப்பிட்ட பால் மற்றும் வேளாண் பொருள்களுக்கு இந்திய சந்தையில் இடம் கிடைக்கும்.

எண்மத் தொழில்நுட்பங்கள், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் சேவையில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக எஸ்தோனியா விளங்குகிறது. இந்தத் துறையில் ஒருங்கிணைந்து செயலாற்ற சிறப்பான வாய்ப்புகள் உள்ளன.

கடந்த 1991-இல் எஸ்தோனியா சுதந்திரம் அடைந்தபோது, முதலில் அங்கீகரித்த நாடுகளில்இந்தியாவும் ஒன்று. ஒவ்வொரு துறையிலும் இருதரப்பு உறவுகள் மேம்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரியில் இந்தியாவில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சிமாநாட்டில் எஸ்தோனிய அதிபா் அலாா் கேரிஸ் பங்கேற்றாா். கடந்த ஆண்டு பாரீஸில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சிமாநாட்டையொட்டி, பிரதமா் மோடியும், கேரிஸும் சந்தித்துப் பேசினா்.

எஸ்தோனியா தலைநகா் தாலின் நகரில் அண்மையில் மகாத்மா காந்தி சிலை திறக்கப்பட்டது. இந்நாட்டில் சுமாா் 2,000 இந்தியா்கள் உள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் எண்ம மற்றும் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகின்றனா். பலா் தொழில்முனைவோராகவும் உருவெடுத்துள்ளனா்.

ஜனநாயகம், பன்முக மாண்புகள் மற்றும் சா்வதேச சட்டத்துக்கு இணங்கும் நாடுகள் என்ற முறையில் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு இந்தியாவும் எஸ்தோனியாவும் எப்போதும் ஆதரவளிக்கின்றன என்றாா் அவா்.

இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே கடந்த ஜனவரியில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது. ‘அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய்’ என வா்ணிக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின்கீழ் 93 சதவீத இந்தியப் பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஆடம்பர காா், மது உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் இறக்குமதி பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.