எட்டாம் ஸ்வரங்கள்

2. அம்பை

ஹேமா பாலாஜி

மஹாபாரதத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களில் முக்கிய பங்கு வகிப்பவள் அம்பை. காசி ராஜனின் மூத்த மகளாக, ஒரு ராஜகுமாரியாக மட்டுமே நமக்கு அறிமுகமாகும் அம்பையின் பாத்திரம் பின்பு மஹாபாரத வரலாற்றில்  முக்கிய இடத்தைப் பிடித்துவிடுகிறது. அதற்கு அப்பெண் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமில்லை. 

வாழ்வில் சில நேரங்களில் புகழை விட, கொண்டாடப்படுதலை விட நிம்மதியும் மன அமைதியுமே மேலானது என்பதை உணரும் போது அதற்காக நாம் அதிக விலை கொடுத்திருப்போம். இதிகாசப் பெண்களுக்கும் அப்படித்தான் போல.

அம்பா காசி ராஜனின் மூத்த புதல்வி. அவளுக்கு அம்பிகா அம்பாலிகா என்ற இரு இளைய சகோதரிகள் உண்டு. காசி ராஜன் தன் பெண்கள் மூவரும் பருவ வயதை அடைந்ததும் தகுந்த மணமகன்களைத் தேடி மணம் முடிக்க விரும்பினான். அந்தக் கால வழக்கப்படி மூன்று ராஜ குமாரிகளுக்கும் சுயம்வரம் ஏற்பாடு செய்கிறான். பல நாடுகளிலிருந்தும் எண்ணற்ற ராஜகுமாரர்கள், இந்த மூன்று ராஜகுமாரிகளையும் தங்கள் வீரத்தையும் பராக்கிரமத்தையும் நிரூபித்து மணம் புரிந்து கொள்ள ஆவலாக வீற்றிருந்தனர்.

மூத்தவளான அம்பைக்கு சௌபல நாட்டு மன்னன் சால்வனிடம் ஈர்ப்பு இருந்தது. அவனும் அவளை விரும்பினான். சுயம்வரத்தில் அவனுக்கே தன் மாலையை இடுவது என அம்பை முடிவு செய்திருந்தாள். மனதில் முடிவு செய்திருப்பவன், தன் காதலன் சபையில் இருக்க அம்பை எப்போதையும் விட அன்று வெகு சிறப்பாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். மனதில் கற்பனைகள் பொங்கியது. கண்கள் மின்ன அவனை சபையில் காணப்போகும் நேரத்துக்காக தன்னை வெகு சிரத்தையாக தயார்படுத்திக் கொண்டிருந்தாள். 

சபைக்கு வந்ததுமே கண்கள் சால்வனைத் தேடின. கூடவே மனதில் ‘அவன் தோள்களின் இன்று என் மாலை தழுவும் அடுத்து நான் தழுவுவேன்’ என்ற நினைப்பு வந்ததும் பெண்ணுக்கே உரிய நானம் வந்து அப்பிக் கொள்ள, கன்னம் சிவந்து தலை குனிந்தாள்.

அதே சமயம் பீஷ்மர் தன் இளைய சகோதரன் விசித்திர வீரியனுக்காக பெண் தேடிக் கொண்டிருந்தார். காசி ராஜன் தன் மகள்களுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்திருப்பதை அறிந்து அரசவைக்கு தானும் சென்றார். அரசவையில் வீற்றிருந்த மன்னர்கள் சிலர் அவரது புகழையும் வீரத்தையும் கருதி விலகி வழிவிட்டனர். அங்கு அவர் வந்த நோக்கத்தை அறியாமல் மற்ற அரச குமாரர்கள் 'கிழவனுக்கு இந்த வயதில் வந்த ஆசையைப் பார். மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை போலுள்ளதே. பிரம்மச்சரிய விரதம் முடித்துவிட்டாரோ?’ என கேலி பேசிச் சிரித்தனர்.

சினம் கொண்ட பீஷ்மர் காசி ராஜனிடம் 'உன் மகள்களை என் நாட்டு மருமகள்கள் ஆக்கிக் கொள்ள அழைத்துப் போகிறேன்’ என்று கூறி மூன்று ராஜ குமாரிகளையும் தன்  தேரில் பலவந்தமாக ஏற்றிச் சென்றார். தடுக்க வந்த மன்னர்கள் எல்லாம் அவரை முறியடிக்க முடியாமல் சிதறி ஓடினர். அம்பையின் காதலன் சௌபல நாட்டு மன்னன் சால்வன் தன் காதலியை பீஷ்மரிடம் இருந்து காக்க கடைசி வரை போராடினான். ஆனால் அவனாலும் பீஷ்மரை வெல்ல முடியவில்லை.

சால்வன் பீஷ்மருடன் தனக்காக போராடியதைக் கண்டு அவள் மனம் பெருமிதத்தில் விம்மியது. யாராலும் தோற்கடிக்க முடியாதவர், வீர புருஷர் பீஷ்மரையே எதிர்த்துப் போராடும் அவனது தன்னம்பிக்கையும் அதற்கும் மேலாக அவன் தன் மேல் கொண்டுள்ள காதலையும் எண்ணி உருகினாள்.  தன்னைக் காத்து தன்னுடன் இட்டுச் சென்றுவிடுவான் சால்வன் என்று மனமார நம்பினாள். கடைசி வரை போராடிய சால்வனால் பீஷ்மரை முறியடிக்க முடியவில்லை. தடுமாற ஆரம்பித்தான்.  மனம் பதை பதைக்க தான் கண்ட கனவெல்லாம் புகை போல கண் எதிரிலேயே கலைவதைக் கண்டாள் அம்பை. கடைசியில் சால்வன் பீஷ்மரை போராட்டத்தில் எதிர் கொள்ள முடியாமல் தன் நாடு திரும்பினான்.

சுயம்வர மாலையுடன் சபையில் காத்திருந்த பருவ வயது ராஜகுமாரிக்கு சற்றும் எதிர்பாராத இத்திருப்பம் அவள் இதயத்தை நடுங்கச் செய்வதாய் இருந்தது. வேறு வழியின்றி அஸ்தினாபுரம் சென்றாள். வழி எங்கும் பலவாராக யோசித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள் என்பதை சபையில் அவள் நின்றிருந்த தோற்றம் காட்டியது.

அஸ்தினாபுரத்தின் அரசவையில் கலங்காத விழிகளுடனும் தெளிந்த சித்தத்துடனும் அவள் பீஷ்மரை நோக்கி தன் மனம் சால்வ மன்னனிடம் சென்றுவிட்டது எனவும், வெறும் உடலால் தங்கள் சகோதரனை தன்னால் மணக்க இயலாது எனவும் தைரியாமாகக் கூறினாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த பீஷ்மரின் சகோதரனும், யாருக்கு மணம் முடிக்க மூன்று ராஜகுமாரிகளையும் பீஷ்மர் கவர்ந்து வந்தாரோ அந்த அஸ்தினாபுரத்தின் மன்னனுமான விசித்திரவீரியன் கூறினான். 'சால்வ மன்னனை மனதில் வரித்திருக்கும் இப்பெண்ணை என்னால் மணம் புரிய இயலாது. அவள் தன் காதலுடனேயே போய் சேரட்டும்’ என்றுவிட்டான்.

பீஷ்மரும் அம்பையை சகல மறியாதைகளோடு சால்வ மன்னனிடம் அனுப்பி வைத்தார். மனதில் மீண்டும் துளிர்விட்ட ஆசைகளோடு, சிதைந்து விட்டதோ என பயந்த தன் கனவு மறுபடியும் வண்ணங்களை வாரிக் கொண்டு தன் கண் முன்னே வந்தாட, மிகுந்த காதலுடன் கிளம்பினாள் அம்பை. அவள் மனதுள் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள். சால்வன் இந்த எதிர்பாராத ஆச்சரியத்தை எப்படி எதிர் கொள்வான், தன்னை வாரி அனைத்துக் கொள்வானா? காலம் தாழ்த்தாது உடனே திருமணம் செய்து தன்னை தனது பட்டத்து ராணியாக்கி பக்கத்தில் இருத்துவானா? என்ற பலவிதமான கற்பனைகளுடன் குதூகலமாக அவன் அரண்மனைக்குச் சென்றாள்.

அவனிடம் அஸ்தினாபுரத்தில் நிகழ்ந்தவற்றைக் கூறினாள். பீஷ்மர் தன் மனம் சால்வனை நாடியது எனத் தெரிந்தவுடன், அவளை வற்புறுத்தாது பெருந்தன்மையுடன் இங்கு அனுப்பி வைத்ததை, சபை நாகரீகம் அறிந்து தன்னை அங்கு இருத்திய பாங்கை, தன் பெண்மைக்கு களங்கம் ஏற்படாமல் நடத்திய விதத்தை எல்லாம், பீஷ்மரின் பால் கொண்ட நன்றியிலும் சால்வனைக் கண்டவுடன் பொங்கிய காதலிலும் நெஞ்சு விம்மக் கூறினாள்.

ஆனால் சால்வனோ அவள் எதிர்பாத்தபடி, கனவு கண்ட படி கற்பனை செய்து மகிழ்ந்தபடி எதையும் செய்யவில்லை. அவள் சற்றும் எதிர்பார்த்திராத சொல்லைச் சொன்னான். 'பெண்ணே பலர் அறிய மன்னர்கள் வீற்றிருந்த சபையில் பீஷ்மர் உன்னை கவர்ந்து சென்றார். அடுத்தவரால் கவரப்பட்டு அவர் வீடு சென்று, பின் அவராலேயே திருப்பி அனுப்பப்பட்ட பெண்னை என்னால் திருமணம் புரிய முடியாது. ஆகவே நீ திரும்பிச் சென்றுவிடு’ என்று ஆயிரம் இடிகளை ஒன்றாக அவள் நெஞ்சில் இறக்கியது போன்றதொரு சொல்லைச் சொல்லிவிட்டான்.

மீண்டும் அம்பை செய்வதறியாது அஸ்தினாபுரமே சென்றாள். அங்கு பீஷ்மரிடம் 'சால்வனை நாடிய என்னை மணம் செய்து கொள்ள உங்கள் சகோதரன் விரும்பவில்லை, உங்களால் கவரப்பட்டு பின் அனுப்பப்பட்ட என்னை சால்வன் ஏற்கவில்லை. அதனால் சுயம்வர மண்டபத்தில் இருந்து என்னைக் கவர்ந்து வந்த நீரே என்னை மணக்க வேண்டும். அதுவே தர்மமாகும்’ என்றாள்.

தான் மேற்கொண்டிருக்கும் பிரம்மச்சரிய விரதத்தை காரணம் காட்டி, அதை மீற முடியாது என்றும் அதனால் அம்பையை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் கூறி பீஷ்மர் மறுத்துவிட்டார். சால்வனிடம் சென்று உன் நிலமையை விளக்கு. அவன் புரிந்து கொண்டு உன்னை ஏற்பான் என்று நம்பிக்கை கொடுத்து மறுபடியும் சால்வனின் நாட்டுக்கு அவளை அனுப்பிவைத்தார். தன்னால் ஏதும் செய்ய இயலாத கையறுநிலை, அவளுக்கு வேதனையையும் துன்பத்தையும் அளித்தது. 

இப்படியாகவே ஒன்றல்ல இரண்டல்ல ஆறுவருடங்கள் அப்பேதை இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்பட்டாள். தவறேதும் செய்யாமலயே மிகப் பெரும் அவமானத்தை அனுபவித்தாள். ராஜகுமாரியாக பிறந்திருந்தும் தன் இளமையை, வளமான வாழ்வை, நிம்மதியை, சமூகத்தில் மறியாதைக்குறிய அந்தஸ்த்தை அனைத்தையும் இழந்து நின்றாள். குற்றம் ஏதும் புரியாமலேயே தண்டனை கிடைத்தது கண்டு மனம் வெதும்பினாள். எத்தனை பெரிய மன அழுத்தத்தில் இருந்திருக்க வேண்டும் அம்பை.

சால்வனிடமும் பீஷ்மரிடமும் கண்ணீரோடு போராடி போராடியே களைத்துப் போன அம்பை மனம் வெறுத்துப் போனாள். தன்னுடைய இந்த நிலமைக்கு காரணம், தன் சம்மதம் இன்றி தன்னை சுயம்வர மண்டபத்தில் இருந்து கவர்ந்து வந்த பீஷ்மரே என்பதால் அவர் மீது அளவில்லாத கோபமும் வெறுப்பும் உண்டாகியது. பீஷ்மரைக் கொல்வதே தன் லட்சியம் என்று சபதம் ஏற்று இமயமலைக்குச் சென்றாள். அங்குள்ள பாகூத நதிக்கரையில் கட்டை விரலை ஊன்றி நின்று பன்னிரெண்டு ஆண்டுகள் கடுந் தவம் செய்தாள். முருகப்பெருமான் அவளுக்குக் காட்சி அளித்து அழகிய மாலை ஒன்றை கொடுத்து 'இனி உன் துன்பம் தொலையும்’ இந்த தாமரை மாலையை அணிபவனால் பீஷ்மர் மரணமடைவார் என்று கூறி மறைந்தார்.

அதன் பின்னும் அவளின் அலைக்கழிப்பும் ஓட்டமும் நின்ற பாடில்லை. எல்லா நாடுகளுக்கும் சென்று ஒவ்வொரு அரசனிடமும் அம்மாலையை அணிந்து கொண்டு பீஷ்மருடன் போரிட்டு கொன்றுவிட மன்றாடினாள். எந்த அரசன் இம்மாலையை அணிகிறானோ அவனுக்கு பீஷ்மரைக் கொல்லும் வலிமை வந்துவிடும். பீஷ்மரைக் கொல்பவருக்கே நான் மனைவியாவேன் என்றாள். ஆனால் பீஷ்மரின் வல்லமைக்கும் பேராற்றலுக்கும் பயந்து யாரும் அதை அணிய முன்வரவில்லை. இருந்தும் மனம் சோராத அம்பை அம்மாலையை எடுத்துக்கொண்டு துருபதன் என்ற பாஞ்சால நாட்டு அரசனிடம் சென்று தனக்கு உதவுமாறு வேண்டினாள்.

துருபதனும் மறுத்துவிட அம்பை மனம் வெறுத்து மாலையை அங்கேயே வீசிவிட்டு மீண்டும் தவம் புரிய சென்றுவிட்டாள். இம்முறை சிவ பெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தாள்.  சிவன் அவளுக்கு காட்சி அளித்து 'பெண்ணே! உன் கோரிக்கை இப்பிறவியில் நிறைவேறாது. அடுத்த பிறவியில் அது நடக்கும். உன்னைக் காரணமாகக் கொண்டு பீஷ்மருக்கு மரணம் எற்படும்’ என்றார்.

பீஷ்மரை கொல்வதே தன் குறிக்கோளாக கொண்டிருந்த அம்பை, தனக்கு இயற்கையான மரணம் சம்பவித்து, ஆயுள் முடிந்து மறுபிறவி ஏற்படும் வரை பொறுத்திருக்கவில்லை. வரம் கிடைத்த மறு நொடியே சிதையில் விழுந்து தன்னை அழித்துக் கொண்டாள். தன்னுடைய மறுபிறவியில் துருபதனின் மகனாகப் பிறந்து சிகண்டி என்ற பெயர் கொண்டாள். பாரதப் போரில் பீஷ்மர் அம்பு பாய்ந்து அம்புப் படுக்கையில் வீழ காரணமானவள் சிகண்டியாகப் பிறப்பெடுத்த அம்பையே.

எல்லா ராஜகுமாரிகளைப் போல அரண்மனை வாழ்வு, காதல், சுயம்வரம் திருமணம் அதைப்பற்றிய கனவு என்றிருந்திருக்க வேண்டிய அம்பையின் வாழ்வு அலைக்கழிப்பிலும் சுயபச்சாதாபத்திலுமே கழிந்தது. காதல் சுமந்து கொண்டிருக்கும் மென்மையான மனம் கொண்டவளுக்கு பழிவாங்கும் எண்ணமும் பீஷ்மரை கொல்லும் காழ்ப்புணர்ச்சியும் வந்தது எதனால்?

அவரவர் நியாயத்தில் அவரவர் தர்மத்தில் அவரவர் நிலைத்திருக்க, அம்பையின் நியாயதர்மத்தையும் மனப் போராட்டத்தையும் உணர்ந்தவர் எவர்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி இடைத் தோ்தலை ஜூனில் நடத்தக் கூடாது: ராமதாஸ்

மீனவா்கள் மீது தாக்குதல்: ஜி.கே. வாசன் கண்டனம்

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 24 போ் கைது

மே தினக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு

அணைகளில் நீா்மட்டம் சரிவு: அணை நீரை குடிநீா், சமையலுக்கு மட்டும் பயன்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT