ரோஜா மலரே..!

ரோஜா மலரே - 10

குமாரி சச்சு

பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு பிடித்த படம் நான் நடித்த ‘ஒளவையார்’. இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தரும் விஷயம். நான் நடித்த திரைப்படம் அவருக்குப் பிடித்த படமாக இருப்பதில் எனக்கு பெருமை அதிகம். நான் அதில் குழந்தை ஒளவையாராக நடித்திருந்தாலும், நான் நடித்துள்ளேன் அல்லவா, அது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

எம்.எஸ். அம்மாவை எனக்கு முன்பே தெரியும். நாங்கள் மயிலாப்பூரில் இருந்தபோது எங்கள் வீட்டிற்கு நேர் எதிரே உள்ள வீட்டில் அவர்களது குடும்பத்தோழி இருந்தார்.

அவரது வீட்டிற்கு அடிக்கடி எம்.எஸ். அம்மா வருவார். அவர் வந்துள்ளார் என்று தெரிந்துகொண்டு நான் தெருவை கடந்து அவர்களது வீட்டிற்குச் செல்வேன். அவர்களும், அவர்களுடன் வந்திருக்கும் ராதாவும் என்னை கூப்பிட்டு மிகவும் அன்பாக பேசுவார். நான் சிறிய வயது ஒளவையாராக நடித்ததை குறிப்பிட்டு என்னை மிகவும் பாராட்டினார். ‘நான் என்றுமே ஒளவையார் படத்தை மறக்கமாட்டேன். நீயும் சிறப்பா நடிச்சிருக்கே’ என்று மிகவும் சிரித்துக்கொண்டே கூறினார்கள். அவர் திரையில் மட்டும் அல்ல, இசையுலகிலும் பட்டொளி வீசி உயரப் பறந்தவர். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று மகிழ்ந்தேன்.

நான் பல திரைப்படங்களில் பெரிய பெண்ணாக நடித்த பின்னர் எம்.எஸ். அம்மா கையால், தியாக பிரம்ம கான சபாவில் ஒரு விருதுகூட வாங்கியுள்ளேன். இன்னும் சொல்லப்போனால் பல்வேறு அறிஞர்கள், உயர் பதவி வகித்தவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் ‘ஒளவையார்’ படத்தில் நடித்ததனால் என்னைப் பாராட்ட, நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இப்படி நான் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து எனக்கு பெயரையும் புகழையும் தந்த படங்கள் பல. அதில் ஒரு படம் ‘மருமகள்’. அதில் ‘சின்ன சின்ன வீடு கட்டி..’ என்று ஒரு பாடல் வரும். குழந்தையாக நான் பாட, அதே பாடலை பெரிய வயசு கதாபாத்திரமும் பாடுவதாக இருக்கும். பாடகர்கள் பெரிய நாயகி, ஏ.எம். ராஜாவும் பாட, எனக்கு குரல் கொடுத்தவர்கள் ஜிக்கி மற்றும் ராணி. அன்று இருப்பதுபோல் பாடலை மட்டும் ஓடவிட்டு, படப்பிடிப்பின்போது வாயசைப்பது மாதிரி இருக்காது. நான் குழந்தை என்பதால் எனக்கு சில நாட்களுக்கு முன்பே வாயசைப்பது சரியாக வர வேண்டும் என்பதால் பயிற்சி கொடுத்துவிட்டு, படப்பிடிப்பிற்கு அழைத்துச் சென்றார்கள்.

அந்தப் படத்திற்கு மெல்லிசை மன்னார் எம்.எஸ். விஸ்வநாதன் இசை. இரண்டு நாட்களுக்கு முன்பே எங்களை தி.நகரில் உள்ள கிருஷ்ணா பிக்சர்ஸ் அலுவலகத்திற்கு அழைத்தார்கள். நாங்கள் அங்கே சென்றபோது, இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், தனது ஆர்மோனியப் பெட்டியுடன் வந்திருந்தார். அவருடன் அன்று தபேலா வாசிப்பவரும் உட்கார்ந்திருந்தார். எனக்கு அவர் பாடலை எப்படி பாட வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார். நான் அவர் சொல்லிக்கொடுப்பதை சரியாகப் பாடுவேன் என்றாலும், அவர் வாசிக்கும் ஆர்மோனிய பெட்டியில் உள்ள சில கட்டைகளை அவர் பார்க்காதபோது நான் அழுத்த, என் குறும்புத்தனத்தை பார்த்து என் தலையில் வலிக்காத அளவில் குட்டுவார். நான் அழுவதுபோல் பாசாங்கு பண்ணி, அவருக்கு நேர் எதிரே வந்து உட்கார்ந்து மீண்டும் பயிற்சியில் ஈடுபடுவேன்.

நான் பெரிய பெண்ணாக மாறிய பிறகு, ஒருநாள் என்னைப் பார்த்த அவர், மிகவும் பாராட்டினர். ‘உன்னை சிறு வயதில் பார்த்தது. அன்று நான் நீ செய்யும் குறும்பால் உன் தலையில் குட்டியிருக்கேன். அந்த குட்டு நீ நன்றாக வர வேண்டும் என்ற ஆசையில்தான். நான் விரும்பியது போலவே, இன்று பேரும், புகழும் பெற்று நன்றாக இருக்கிறீர்கள். நான் குட்டியது வீண் போகவில்லை’ என்று பெருமையாக கூறினார்கள். ஆக, நானும் மோதிரக்கையால் குட்டு பட்டிருக்கேன் என்ற சந்தோஷம் எனக்கு. இதில் என்ன பெருமை என்றால், அந்த நிகழ்ச்சியை நானும் மறக்கவில்லை, இசை மேதையான எம்.எஸ். விஸ்வநாதனும் மறக்கவில்லை. அதுதான் இதில் சிறப்பான விஷயம்.

எனக்கு மறக்கவில்லை என்றால் காரணம், அவர் அன்று அந்த ஹார்மோனிய பெட்டியை வாசிக்கும் அழகே தனிதான் என்று சொல்ல வேண்டும். அந்த ஹார்மோனிய பெட்டி இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பராமனின் ஹார்மோனிய பெட்டி. அதன் நாதமே வித்தியாசமாக இருக்கும். பழைய டைப் ஹார்மோனிய பெட்டி. உயரமாக இருக்கும். அதை வாசித்துதான் எங்களுக்கு மெல்லிசை மன்னர் சொல்லிக்கொடுப்பார். இதற்கு அப்புறம்தான் பாடலையே ஒலி நாடாவில் போட்டு வாய் அசைப்பது வந்தது. இன்று விஞ்ஞானம் எங்கோ போய்விட்டது.

அதற்கு அடுத்த வந்த பல படங்களில் ஒன்று ‘எதிர்பாராதது’. இதன் படப்பிடிப்பு நெப்டியூன் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அந்த நெப்டியூன் ஸ்டுடியோ எங்கே இருந்தது என்று பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். அன்றைய நெப்டியூன் ஸ்டூடியோதான், பின்னர் சத்யா ஸ்டூடியோவாக மாறியது. இன்று அதுவே ஜானகி-எம்.ஜி.ஆர். கல்லூரியாக இருக்கிறது. இந்த ஸ்டூடியோவில்தான் ‘எதிர்பாராதது’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதன் கதை, வசனகர்த்தா, அந்தப்படத்திற்கு பிறகு, பல்வேறு புதுமையான படங்களை தந்ததோடு, அவற்றை வெற்றிப்படங்களாக மாற்றியவர். இவரது கதை வசனம், இயக்கம் என்றால் அன்றுள்ள மக்கள் முதல், இன்றுள்ள இளைஞர்கள் வரை அவரது படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பார்கள்.

பின்னாளில் அவரது இயக்கத்தில் நான் பல படங்களில் நடித்துள்ளேன். அவர்தான் தமிழ் திரை உலகில் பல்வேறு புதிய படைப்புகளை கொடுத்த கதை, வசனகர்த்தா மற்றும் இயக்குநர் ஸ்ரீதர். தமிழ் திரைப்பட உலகில் அவருக்கான இடம் என்றும் இருக்கும். படத்தின் கதைப்படி ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்துவிடும். அதில் பயணம் செய்த பலரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர். அவருக்கு கண்பார்வை போய்விடும். அவரை மலை ஜாதி பெண்கள் சிலர் காப்பாற்றி கண்களுக்கு பச்சை இலைகளை வைத்து கண் பார்வை வர வைத்தியம் செய்வார்கள். அந்த மலை ஜாதி கூட்டத்தில் நானும் ஒரு குழந்தையாக இருப்பேன். அவருக்கு தைரியம் கொடுக்க வேண்டி, அவருக்கு ஆதரவாக நான் வசனம் பேசுவேன். ஸ்ரீதர் சார் ஒரு பக்க வசனம் எழுதி எனக்குப் படித்து காண்பித்தார்.

நான் முன்பே சொன்னதுபோன்று என்றுமே, நான் பேப்பரை வைத்துக்கொண்டு வசனங்களை மனப்பாடம் செய்யமாட்டேன். யாராவது படித்து காண்பித்தால் போதும் சரளமாக படப்பிடிப்பின்போது எனக்கு கொடுக்கபட்ட வசனத்தை பேசமுடியும். இந்த ஆற்றல் எப்படி எனக்கு ஏற்பட்டது என்று கேட்டால், இது மாதிரி சிறிய வயதிலிருந்து, பல வசனகர்த்தாக்கள் சொல்லிக்கொடுத்து, நான் அவர்கள் சொல்லச் சொல்ல என்னையறியாமல் அதை என் மூளை என்ற ரெக்கார்டரில் பாதுகாக்க, அது தேவைப்படும்போது வெளிவருகிறது.

நடிகர் திலகம் சிவாஜி என்னை முன்பே பார்த்திருக்கிறார் என்றாலும், நான் அவருடன் நடிக்கும் முதல் படம் ‘எதிர்பாராதது’தான். நான் பங்குகொள்ளும் படப்பிடிப்பும் வந்தது. என்னை சிவாஜி முன் நிறுத்தி, நான் வசனத்தை சொல்லிக்கொடுத்துவிட்டேன் என்று கூறி, வசனங்களை கூறு என்றார் ஸ்ரீதர் சார். நான் வசனங்களை முழுமையாகப் பேசிக் காண்பித்தேன். அப்பொழுது சிவாஜி சார் என்ன சொன்னார் தெரியுமா? ‘என்ன இப்படி மடை திறந்த வெள்ளமாக வசனங்களை இந்த குழந்தை சொல்றா’ என்று சொல்லிக்கொண்டே என்னை அதிசயமாக பார்க்க, அதற்கு ஸ்ரீதர் சார் ‘ரொம்ப கெட்டிக்கார குழந்தை இந்த பெண்’.

எந்த வசனமாக இருந்தாலும் சரி ஒருதரம் சொல்லிக்கொடுத்தால், அப்படியே பிடித்துக்கொண்டு சொல்லுவாள் என்று சொல்ல, என்னை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, ‘இந்த வசனங்களை நீ சொன்னதுபோல் சொல்லக் கூடாது. இப்படி நிறுத்தி, இப்படி சொல்ல வேண்டும்’ என்று தனது வாயால், எப்படி என் வசனங்களை சொல்ல வேண்டும் என்று எனக்கு அவர் அன்று சொல்லிக்கொடுத்தார். அதை அப்படியே நான் சொல்ல மிகவும் மகிழ்ந்துபோனார் நடிகர் திலகம் சிவாஜி. இப்படிப்பட்ட ஜாம்பவான்கள், மற்றும் பல்வேறு புகழ்பெற்றவர்களின் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்ததனால்தான் என்னால் இன்றும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்க முடிகிறது என்று நான் நினைக்கிறேன்.

இந்த நிலையில் நான் விடாது பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு படமும் புகழின் ஏணிப்படிகளில் என்னை மெல்ல மெல்ல ஏற்றிக்கொண்டிருந்தது. சிறிய பாத்திரமோ, இல்லை பெரிய பாத்திரமோ, குழந்தை வேடம் என்றால் என்னை கூப்பிட தயங்கியதே இல்லை. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு படப்பிடிப்பு இருந்துகொண்டே இருக்கும். இப்படி இருந்த நேரத்தில் ஒருநாள் என்னுடைய படப்பிடிப்பு ஒரு ஸ்டூடியோவில் நடந்துகொண்டிருந்தது. அதே ஸ்டூடியோவில் இன்னொரு தளத்தில் வேறொரு படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. எனக்கு தெரிந்த கம்பெனி அது. அவர்கள் தயாரித்த சில திரைப்படங்களில் நான் நடித்திருக்கிறேன். என் பாட்டியிடம் வந்து இந்த கம்பனியில் நம்மை நடிக்க அழைத்துள்ளார்களா? என்று கேட்டேன். இல்லை என்று சொன்னார்.

நேராக சென்று நான் இந்தப் படத்தில கிடையாதா என்று கேட்டேன்? யாரிடம் கேட்டேன் என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT