வரலாற்றின் வண்ணங்கள்

15. அரசாங்கத்துக்குத் துரோகம் செய்தால்..

முனைவர் க. சங்கராநாராயணன்

அரசாங்கத்துக்கு எதிரான செயல்களைச் செய்வது தொன்றுதொட்டே நிகழும் செயல்தான். அவற்றை எதிர்கொண்ட விதத்தை வரலாறு பதிவு செய்யாமல் இல்லை. இன்றைக்கோ ஜனநாயகம் என்ற பெயரில் அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படுவது உரிமை என்னும் அளவில் போய்விட்டது. அரசாங்க துரோகம் நிரூபிக்கப்பட்டாலும், தண்டனை முதலிய செயல்கள் பல்வேறு நீண்ட முறையீடுகளுக்குப் பிறகு என்பது தெரிகிறது. ஆனால், வரலாற்றின் வண்ணங்கள் இந்தச் செயல்களுக்கான எதிர்வினையைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

உடையார்குடியில் உள்ள இராசராசனின் ஒரு கல்வெட்டு, ஆதித்த கரிகாலனின் கொலையில் தொடர்புடைய ஐந்து அந்தணர்களை விசாரித்த பிறகு அவர்கள், இவர்களிடம் மணவுறவு பாராட்டியவர்கள், மாமன்மார் முதலிய உறவினர்கள், அவர்களுடன் பிறந்தோரை வேட்டவர்கள் என்று அனைவரின் உடைமைகளையும் பறிமுதல் செய்ய அரசனின் ஆணை பிறப்பிக்கப்பெற்றதைக் குறிப்பிடுகிறது.

பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்................................. தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ................ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம்.

ஆக, துரோகம் செய்தார் மட்டுமின்றி அவர்தம் குடும்பத்தார், மணவுறவு கொண்டார் என்று அனைவரின் உடைமைகளையும் பறிமுதல் செய்வதைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

சீர்காழியில் உள்ள மற்றொரு கல்வெட்டு, இராசராசனின் எட்டாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு, துரோகத்துக்கு உட்பட்டார் அவர்தம் உறவினர்கள், அவர்களிடம் வேலை செய்வார்கள் என்று அனைவரின் உடைமைகளையும் இராசராசப்பெருவிலையில், அதாவது ஏலத்தில் விடுக்க விடப்பட்ட ஆணையைக் குறிப்பிடுகிறது.

இதனைப் போலவே, திருவலிவலத்தில் உள்ள பதிமூன்றாம் நூற்றாண்டின் ஒரு கல்வெட்டு, துரோகியாகப் பலரையும் காணி மாறின நிலம் என்று குறிப்பிட்டு, துரோகியாக இருந்தவர்களின் நிலத்தைப் பறித்தமையைக் குறிப்பிடுகிறது. அதன்மூலம், முப்பத்துமூன்றாயிரம் காசுகளை ஈட்டியமையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கோயில் திருமாளத்தில் உள்ள மற்றொரு கல்வெட்டு, இவ்விதம் அரசத்துரோகம் செய்தவர்களிடமிருந்து ஐந்து வேலி நாலு மா அளவுள்ள நிலத்தைப் பறித்து அதன்மூலம் 13000 காசுகளை ஈட்டியமையைக் குறிப்பிடுகிறது.

இதனைப் போலவே, சிவபுரம் மற்றும் திருவெண்காடு போன்ற இடங்களிலும் பல்வேறு துரோகச் செயல்களுக்காக அவர்தம் நிலத்தைப் பறிமுதல் செய்து அதனைப் பெருவிலையில், அதாவது ஏலத்தில் விட்டு காசு ஈட்டியமையைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இதனைப் போலவே, கடத்தூரில் உள்ள கொங்கசோழனான விக்கிரமசோழனின் ஒரு கல்வெட்டு, தென்கொங்கு உதயாதிச்ச தேவருக்குத் துரோகம் செய்துவிட்டு அங்கிருந்து வடகொங்குக்குப் போனவர்களின் நிலமான ஆறுகலம் நிலத்தை இருவர் எடுத்துக்கொண்டு, அவற்றைக் கோயிலுக்குத் தானமாக அளித்த செய்தியைத் தருகிறது.

இங்கு துரோகம் என்று குறிப்பிடப்பெறுவது அரசாங்கத்துக்கு எதிராக நடப்பது மட்டுமின்றி ஆணைக்குப் புறம்பாக நடப்பதையும் சேர்த்துத்தான். சில இடங்களில், மூன்று மாதங்களில் தண்டனை அமலுக்கு வந்திருப்பதும் கல்வெட்டுகளால் புலனாகிறது. ஆகவே, அரசத் துரோகத்துக்காகக் கொண்டார் கொடுத்தாரோடு அனைவரின் உடைமைகளையும் பறித்து ஏலத்தில் விடுத்தமை கல்வெட்டுகளால் தெளிவாகிறது.

இன்றைய சூழ்நிலையில் அரசனைப் போல நிகழ்த்துவதற்கு ஒரு வாய்ப்பும் இல்லையெனினும், விசாரணையை விரைவில் முடித்தாவது இதுபோன்ற நிகழ்வுகளில் தண்டனைகளை உறுதியாக்கினால்தான் நற்பலன் நேரும் என்பது உறுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT