யோகம் தரும் யோகம்

ஆசனம் 49. ஏகபாதாசனம்

கே.எஸ். இளமதி

அஷ்டாங்க யோகம் – இயமம்

யோகநீதிக் கதை

ஆறாத வடு

சரண்யா – செந்தில்நாதன் இருவருக்கும் பதினோரு பொருத்தங்கள் பார்த்துதான் திருமணம் செய்துவைத்தனர் அவர்கள் பெற்றோர். ஆனாலும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள்,  சண்டையாகி, அடிதடி அளவுக்கு முற்றி, இனி சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலையில் கோர்ட்டுக்குப் போய்விட்டார்கள்.

எங்கிருந்து இந்தக் கருத்துவேறுபாடு வந்திருக்க முடியும் என்று குழம்பவேண்டியதில்லை. கல்யாண மண்டபத்திலேயே எல்லாரும் கிசுகிசுத்தார்கள்.

மாப்பிள்ளைக்கு ஏத்த பொண்ணே இல்லை...

எப்பேர்ப்பட்ட மாப்பிள்ளைக்கு எப்படிப்பட்ட பொண்ணு பாருங்க. கருமம்...

நகை நிறைய போட்டிருப்பாங்களோ...

அண்டங்காக்காகூட கொஞ்சம் கலரா இருக்கும்போல இருக்கே…

ராஜா மாதிரி மாப்பிள்ளையைக் கொண்டுபோய் கருவாச்சிப் பொண்ணுங்கற கெணத்துல தள்ளிட்டாங்க...

இவள கூட்டிட்டு எப்படி வெளியில போகப்போறான். ஜோடிப் பொருத்தம் கொஞ்சம்கூட இல்லியே…

இப்படித்தான் எல்லோருமே மண்டபத்தில் அன்று பேசிக்கொண்டார்கள்.

செந்தில்நாதனுக்கு சரண்யா பொருத்தமானவள் இல்லை என்று ஊரே பேசியது.

எத்தனையோ உறவுகளும் நட்புகளும் ஆன்மிகப் பெரியவர்களும் வந்து இருவரையும் சேர்த்துவைத்துச் சமாதானப்படுத்திப் பார்த்தார்கள்.

சரண்யாவின் சமையலுக்கு மட்டும் செந்தில்நாதன் அடிமை. நன்றாகச் சாப்பிட்டுவிட்டு வந்து சண்டை போடுவான்.

அவள் எது சொன்னாலும் கோபப்பட்டான்.

அவள் பதில் பேசினாலே கன்னத்தில் அறை விடுவான்.

அடிகள் விழுந்ததுமே சுருண்டு விழுவாள் சரண்யா.

சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவன் கையை ஓங்கக் காரணம், அவளது நிறமும் எடையும்தான்.

ஆனாலும், சண்டைக்கும் சச்சரவுக்கும் இடையே இரண்டு ஆண் பிள்ளைகளைப் பெற்றுவிட்டார்கள்.

சண்டைகளைப் பார்த்துக்கொண்டே பாதிப்போடு வளர்ந்தார்கள் பிள்ளைகள்.

சண்டை முற்றிக்கொண்டே போனது. அடி வாங்கி அடி வாங்கியே இளைத்துப்போனாள் சரண்யா.

இதற்கு மேல் ஒத்துப்போகாது என்ற முடிவுக்கு இருவருமே வந்துவிட்டனர்.

மனமொத்து விவகாரத்துக்கு மனு செய்தார்கள்.

நீதிபதி, ஏழு ஆண்டுகள் வரை அவகாசம் கொடுத்திருந்தார்.

அத்தனை வருடங்கள் ஆன பின்னரும் இருவரும் இணங்கி வரவில்லை. கடைசியில், நல்லவிதமாக விவகாரத்து பெற்றுக்கொண்டார்கள்.

செந்தில்நாதன் கொடுத்த ஜீவனாம்சத்தைக்கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டு, டீச்சர் வேலைக்குச் சென்று பிள்ளைகளைக் கண்ணும்கருத்துமாக வளர்த்தாள் சரண்யா.

பிள்ளைகள் எந்தப் பக்கம் சாய்வது என்று தெரியாமல் தவித்தார்கள். கடைசியில், அம்மா பக்கமே சாய்ந்துவிட்டார்கள். அதுதானே எங்குமே வழக்கம்!

அப்பாவையும் விட முடியவில்லை. அதனால், வாரத்தில் ஒருநாள் சனிக்கிழமை இரவு மட்டும் அப்பா செந்தில்நாதன் வீட்டில் பிள்ளைகளைத் தங்கவிடுவது என்று தீர்மானிக்கப்படது.

வருடங்கள் உருண்டன.

நோயும் முதுமையும்தான் மனிதனுக்குப் பாடம் கற்றுத் தருகிறது; அத்துடன், தன்னைத் தானே அறியவும் வைக்கிறது.

செந்தில்நாதன் அலுவலகப் பணிகள் நிமித்தம் எப்போதும் பைக்கிஏயே வெளியில் சுற்றுபவன். தொலைதூரங்களுக்குக்கூட பைக்கில்தான் பயணிப்பான். தார்ச் சாலைகளைக்
கடந்து புழுதி பறக்கும் சின்னஞ்சிறு குக்கிராமங்களுக்கும்கூட பைக்கில்தான் போய் வருவான்.

திடீரென்று ஒருநாள், செந்தில்நாதனுக்குக் கண்களில் தாளமுடியாத வலி! வழக்கமான சொட்டு மருந்துகள் விட்டு சிகிச்சைகள் எடுத்துக்கொண்டான்.

ஆனாலும், கண்ணுக்குள் பயங்கரமான வலி! பார்வையே போய்விடுவது போன்ற நிலை வந்தபோதுதான், சிறப்பு மருத்துவரிடம் சென்றான்.

டாக்டர் பரிசோதித்துவிட்டு, கண்களுக்கு மிகச் சிறிய இரும்புத் துகள்கள் இருப்பதாகச் சொன்னார்.

கண்ணுக்குள் இரும்புத் துகள்கள் எப்படி டாக்டர்…

முடியும். நீங்கள் பைக்கிலேயே சுற்றுபவர். கண்ணாடி அணியாமல் வேறு சுற்றியிருக்கிறீர்கள். புழுதி வீசும் பகுதிகளுக்குச் செல்லும்போது, காற்றில் மிதந்துகொண்டிருக்கும்
இரும்புத் துகள்கள் கண்களுக்குள் பாய்ந்து ஆழ் மட்டத்தில் போய் உட்கார்ந்துகொள்ளும்! அவற்றை ஆபரேஷன் செய்துதான் அகற்ற வேண்டும். மேஜர் ஆபரேஷன்தான்.
உங்க ஒய்ஃப் பத்து நாள் கூட இருந்தாதான் சரிப்பட்டு வரும்.

ஆபரேஷன் சமயத்தில் வேறு யாரும் அவனுடன் இருக்க முடியாது. காரணம், கண்களுக்குக் கட்டுப்போட்டுவிடுவார்கள். டாய்லெட்டுக்கு போகும்போது மனைவி மட்டும்தானே உடன் போக முடியும் என்று கூறிவிட்டார்கள்.

அதனால், இப்போது அவன் மனைவியைத் தேட ஆரம்பித்தான்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள்.

அது உடன்பிறப்புகளுக்கு மட்டும் என்ற காலம் மலையேறிவிட்டது.

உண்மையான அன்பு இருந்தால், இப்போது எல்லாருக்குமே தசை ஆடும்.

அப்படித்தான், சரண்யாவும் ஆடிப்போனாள்!

விவகாரத்து, தடைகள் எல்லாவற்றையும் மீறி, கணவனைப் பார்க்கப் புறப்பட்டாள்.

முகத்தை மறுபக்கமாகத் திருப்பிக்கொண்டான் செந்தில்நாதன்.

கோபத்தில் அல்ல; குற்ற உணர்ச்சியில்!

சரண்யா வாஞ்சையோடு அருகில் சென்று செந்தில்நாதன் தலையைத் தடவினாள்.

அவன் கண்கள் கலங்கின.

எக்காரணத்தை கொண்டும் கண்ணீர் விட்டு அழுதுவிடக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருந்தார்.

அதனால், அவனுக்கும் சேர்த்து அவள் அழுதாள்.

செந்தில்நாதனுக்கு துக்கத்தால் தொண்டை அடைத்தது. பேசமுடியாமல் தவித்தான்.

சரண்யாவிடம் டாக்டர் பேசினார்.

இவருக்கு இப்போ தேவை அன்புதான். உடம்புல வேற எங்கியாது பிரச்னை இருந்தா சமாளிச்சிடலாம். ஆனா கண்கள் பாதிக்கப்பட்டிருக்கு. அதை மனசுல வெச்சிக்கிங்க.
இனிமே இவர் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். பார்வை போயிடுச்சுன்னா, அவருக்கும் கஷ்டம், உங்க எல்லாருக்குமேகூட கஷ்டம்தான்.

நான் பாத்துக்கறேன் டாக்டர். நீங்க தைரியமா ஆபரேஷனை ஆரம்பிங்க என்றாள் சரண்யா.

ஆபரேஷன் தேதி முடிவு செய்யப்பட்டது.

சரண்யா பிள்ளைகளுக்காக கவலைப்பட்டாள். கடவுள் இரண்டாவதாகக் கொடுத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி இனியாவது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தீர்மானித்தாள்.

ஆபரேஷன் முடிந்து, ஒரு வாரத்துக்குப் பிறகு கட்டுகள் பிரிக்கப்பட்டன. செந்தில்நாதன் கண்களைத் திறந்து மனைவி சரண்யாவை முதன்முறையாகப் பார்த்தான். பிள்ளைகளோடு மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார்கள்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியின் சமையலை சுவைக்க தயாரானான்.

இன்னிக்கு என்ன சமைக்கப்போறே?

உங்களுக்குப் பிடிச்ச சாம்பாரும் எண்ணெய்க் கத்தரிக்காய் பொறியலும்.

உனக்குப் பிடிச்சதையே சமை.

உங்களுக்கு பிடிச்சதுதான் எனக்கும் பிடிக்கும்னு உங்களுக்கு தெரியாதா?

பிள்ளைகளுக்குப் பிடிச்ச மோர்க்குழம்பும் வெண்டைக்காய் பொரியலும்தான் நம்ம ரெண்டு பேருக்குமே ரொம்பப் பிடிக்குமே. அதையே செஞ்சிடேன்.

சரண்யா யோசித்தாள்.

என்ன யோசிக்கிறே..

ஒண்ணும் இல்லை என்று சற்று தடுமாற்றதுடன் சமையலறைக்குள் நடந்தாள் சரண்யா.

செந்தில்நாதன் ஆசையோடு காத்துக்கொண்டிருந்தான்.

மதியச் சாப்பாடு தயாரானது.

வா, ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடலாம் என்று சரண்யாவின் கையைப்பிடித்து இழுத்தான் செந்தில்நாதன்.

அவனை முதலில் சாப்பிடச் சொன்னாள் சரண்யா.

அவன் வற்புறுத்தினான்.

இல்லீங்க. இன்னிக்கு ஒருநாள் மட்டும் முதல்ல நீங்க சாப்பிடுங்க. அந்த இலையில நான் சாப்பிடறேன். நமக்குக் கல்யாண நாள் மாதிரி!

பூரிப்புடன் சாப்பிட்டு முடித்து, நீ உட்கார்ந்து சாப்பிடு என்றான்.

வேணாங்க. காலைல சுட்ட இட்லி இருக்கு. அதை சாப்பிட்டுக்கறேன்.

அது வேணாம்.

இல்லீங்க, வேஸ்ட் ஆயிடும்.

நீ பொய் சொல்ற.

காலைல சுட்ட இட்லி இருக்கு, தோசை இருக்கு. கேசரிகூட இருக்கு என்றாள்.

அப்போதுதான் செந்தில்நாதன் யோசித்தான்.

காலையில் அவனது அலுவலக நண்பர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். அதனால், சரண்யாவோடு ஒன்றாகச் சாப்பிட முடியவில்லை.

சரி பரவாயில்ல. அதெல்லாம் வேஸ்ட்டா போனா பரவாயில்ல. இன்னிக்கு ஒருநாள்தானே. இப்ப செஞ்சதை சாப்பிடு.

அவள் மறுக்க, இவன் திமிர, அவனுக்குள் இருந்த மிருகம் கொஞ்சம் கொஞ்சமாக கண்விழித்தது.

நான் இன்னொரு நாள் சாப்பிட்டுக்கறேங்க…

பளார் என்று ஒரு அறைவிட்டான்.

சுருண்டு விழுந்து மூர்ச்சையானாள் சரண்யா.

சரண்யாவை சுமந்துகொண்டு மருத்துவமனை விரைந்தது ஆம்புலன்ஸ்.

பயப்பட ஒண்ணும் இல்ல. மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க. இவங்கள மனநல டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்க.

அதே ஆம்புலன்ஸில் சரண்யாவை அழைத்துச் சென்றான் செந்தில்நாதன்.

அங்கிருந்த டாக்டர்கள் சரண்யாவை பரசோதித்தனர். அவளது ஆழ்மனதில் இருந்ததையெல்லாம் தெரிந்துகொண்டார்கள்.

செந்தில்நாதனிடம் வந்து, அவங்க ரொம்ப அதிர்ச்சியில இருக்காங்க. அவங்களுக்கு நல்ல தூக்கமும் ஓய்வும் தேவை. நாங்க பாத்துக்கறோம். நீங்க இங்க இருக்கனும்னு அவசியம் இல்ல என்றனர்.

செந்தில்நாதன் கவலையுடனே வீட்டுக்குப் போனான்.

ஐந்தாம் நாள் அவளுக்கு விழிப்பு வந்தது. செந்தில்நாதனை வரவழைத்தார் டாக்டர்.

உங்க மனைவிகிட்ட நாங்க விசாரிச்சதுல சில உண்மைகள் தெரிய வந்தது.

செந்தில்நாதன் மனதுக்குள் வேறு ஏதேதோ கற்பனையில் நினைத்துக்கொண்டான். மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டாளோ… நினைக்கும்போதே அவனுக்கு கோவம் தலைக்கேறியது.

அவங்ககிட்ட விசாரிச்சத நாங்க ரெக்கார்ட் பண்ணியிருக்கோம். நீங்களே கேளுங்க.

என்னோட ஹஸ்பண்ட் செந்தில்நாதன் மேல எனக்கு ரொம்ப உசுரு. அவரு அழகா இருக்காரு. ஆனா அவருக்கு ஏத்த மனைவி நான் இல்லை. நான் ரொம்பவும் கருப்பா, குண்டா வேற இருக்கேன். பெரியவங்க சேர்ந்து என்னை அவருக்கு கட்டிவெச்சிட்டாங்க. கல்யாணம் ஆன நாள்ல இருந்து, அவருக்கு என்னைப் பிடிக்கல. எதுக்கெடுத்தாலும் கோவம், அடி, உதை.

ஒருநாள், அவருக்கும் பிள்ளைங்களுக்கும் பிடிச்ச மோர்க்கொழம்பும் வெண்டைக்காய் பொரியலும் பண்ணியிருந்தேன். நல்லா சாப்பிட்டாரு. அவர் சாப்பிட்ட எச்சில் தட்டுல நான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். அப்போ, அவருக்கு வந்த தபால் பத்தி கேட்டாரு. மறந்துட்டேன்னு சொல்லி, நான் வாங்கி வெச்சிருந்த தபால கொண்டு வந்து கொடுத்து மன்னிப்பு கேட்டேன். ஆனா, என் மேல கோவப்பட்டாரு. என்னை கண்டபடி திட்டிட்டாரு. சாப்பாட்ட பத்தி அசிங்க அசிங்கமா அருவருப்பு வர்ற மாதிரி சொல்லிட்டாரு.
அன்னிலேருந்து, எனக்கு எந்த சாப்பாடும் பிடிக்காம போய்டுச்சி. வாய் வழியா சாப்பிட முடியாம, நோயாளி மாதிரி டியூப் மூலமாதான் சாப்பிட்டு வந்தேன்.

இவருக்கு சமீபத்துல கண்ணுல ஆபரேஷன் நடந்துச்சி. இவர பக்கத்துல இருந்து பாத்துக்க நான் வந்திருந்தேன். அப்போ மோர்க்குழம்பும் வெண்டக்கா பொரியலும் பண்ணியிருந்தேன். இவர் சாப்பிட்ட அப்பறம் அந்த தட்டுல என்னை சாப்பிடச் சொன்னாரு.

நான் சாப்பிட உட்கார்ந்த நேரம், ஏற்கெனவே அவர் என்னை பத்தியும் சாப்பாட்ட பத்தியும் அருவருப்பா பேசினது ஞாபகத்துக்கு வந்துச்சி. அதனால என்னால சாப்பிட முடியல. இவர் வற்புறுத்தியும் நான் சாப்பிடாததால என்னை அடிச்சிட்டாரு…

பேசிமுடித்தாள் சரண்யா.

டாக்டர் எதுவும் பேசாமல் போய்விட்டார்.

செந்தில்நாதன், சரண்யா இருந்த அறையை நோக்கி ஓடினான்.

சரண்யா கண்விழித்தபோது, அவள் கால்மாட்டில் தலைவைத்து அழுதுகொண்டிருந்தான் செந்தில்நாதன்.

உள்ளே வந்த டாக்டர், ஒரு வார்த்தை கொல்லும்; ஒரு வார்த்தை வெல்லும். நீங்க பேசின வார்த்தை இவங்கள கொன்னிருந்தா நிம்மதியா செத்துப்போயிருப்பாங்க.

மனுஷன் கஷ்டப்படறது எதுக்கு, நல்லா சாப்பிடறதுக்குதானே. இவங்க சாப்பாட்டுல மண்ண அள்ளிப்போட்டுடீங்களே. இது மனநல மருத்துவத்துக்கு அப்பாற்பட்ட விஷயம்.

இதுக்கு மருந்து மாத்திரையெல்லாம் வேலை செய்யாது. எப்படி வாழறதுன்னு கலந்து பேசி முடிவெடுங்க. இல்லேன்னா, மறுபடியும் பிரிஞ்சி போயிடுங்க என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு வெளியேறினார் டாக்டர்.

என்னை மன்னிச்சுடு சரண்யா. இல்லேன்னா, நான் உனக்கு பண்ண பாவத்துக்கு நான் செத்துப்போறேன்…

இப்ப என்ன ஆகிப்போச்சின்னு இப்படி பேசறீங்க. புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வரத்தான் செய்யும். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு மனசு திருந்தி ஒண்ணாயிருக்கோம். பழசையெல்லாம் எதுக்கு நெனச்சிக்கிட்டு. வாங்க வீட்டுக்கு போலாம். மன்னிக்கறதுதான் மனுஷ குணம். நான் உங்களை மன்னிச்சுட்டேன். இனிமே என்னை என்ன வேண்டுமானாலும் பேசுங்க. ஆனா, மத்தவங்க யாரையும் அப்படி பேசிடாதீங்க என்றாள் சரண்யா.

தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு! நாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இயமம்!

***

ஆசனம்

ஏகபாதாசனம்

பொருள் விளக்கம்

ஏகம் என்றால் ஒன்று. ஒரு காலில் நின்று செய்யக்கூடிய ஆசனம் என்பதால் இதற்கு ஏகபாத ஆசனம்(ஏகபாதாசனம்) என்று பெயர்.

செய்முறை

   • விரிப்பின் மீது நேராக நிற்கவும்.

   • வலது காலை மடக்கி இடதுகாலின் உட்பகுதியில் வைக்கவும்.

 • இரண்டு கைகளையும் அகலமாக விலக்கி விரித்து, மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே கைகளை மேலே உயர்த்தி, கும்பிடுவதுபோல் சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

   • சில சுவாசங்கள் அப்படியே இருக்கவும்.

   • பின்னர் கைகளை மெதுவாக விலக்கியபடி, சுவாசத்தை வெளியிடவும்.

   • சிறிது ஓய்வுக்குப் பிறகு, காலை மாற்றிச் செய்யவும்.

பலன்கள்

ஒற்றைக் காலில் நேராக நிற்பதால் கவனம் சிதறாது. அதனால் மனம் ஒருமுகப்படும். நினைவாற்றல் பெருகும். கால்கள் வலுவடையும்.

காணொளி: மகேஷ்
படம்: பாலாஜி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT