காட்டில் வாழ்ந்த ஒரு நரி பக்கத்து கிராமத்திற்குச் சென்றது. போகும் வழியில் ஒரு திராட்சை தோட்டத்தைப் பார்த்தது. அங்கு திராட்சைக் கொத்துக்கள் கொத்தாக தொக்கிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் நரிக்கு திராட்சையைத் தின்ன ஆசை வந்துவிட்டது.
அதுவோ தன்மானம் உள்ள நரி. மற்ற நரிகளைப் போல் திருடித் தின்ன விருப்பமில்லை. தோட்டக்காரனிடம் சென்று, "ஐயா எனக்கு உங்கள் தோட்டத்து திராட்சைப் பழங்களைப் பார்த்தவுடன் அவற்றை சாப்பிட வேண்டும்போல் இருக்கிறது. தயவு செய்து எனக்கு ஒரு கொத்து திராட்சைப் பழம் தரமுடியுமா? என்றது.
"நரியாரே! நீ திருடித் தின்னாமல் நேரில் வந்து கேட்கிறாய். எனக்கு உன் நேர்மை பிடித்திருக்கிறது. ஆனால், நான் கஷ்டப்பட்டு வளர்த்த திராட்சைப் பழங்களை இலவசமாகக் கொடுக்க மாட்டேன். நீ எனக்கு ஏதாவது உதவி செய்தால், திராட்சைப் பழம் தருகிறேன்'' என்றார்.
"என்னால் என்ன உதவி செய்ய முடியும் உங்களுக்கு?'' என்றது நரி.
"இரவு நேரங்களில் ஏதோ ஒரு மிருகம் தோட்டத்தில் நுழைந்து பயிர்களை நாசம் செய்கிறது. அதைக் கண்டுபிடி''
"ஐயா... இரவு நேரத்தில் வரும் அந்த மிருகத்தைக் கண்டுபிடித்து விரட்டி அடிக்கிறேன்'' என்றது நரி.
தோட்டக்காரனிடம் கூறியபடி இரவு நேரத்தில் தோட்டத்தைச் சுற்றி சுற்றி வந்தது நரி. அப்போது ஒரு கறுத்த மிருகம் தோட்டத்தின் உள்ளே நுழைவதைப் பார்த்தது. ஓடிச் சென்று அதை துரத்தி துரத்தி, கடித்து விரட்டியது. அந்தக் கறுத்த மிருகம் ஒரு காட்டுப் பன்றி.
நரியின் கடியால் பயந்துப் போன பன்றி, அதன் பிறகு அந்தத் தோட்டத்தின் பக்கமே வரவில்லை. இதைக் கண்ட தோட்டக்காரன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். நரியைப் பார்த்து, "நீ நல்ல வேலை செய்திருக்கிறாய். இனிமேல் என் தோட்டத்திற்கு இரவு நேர காவல்காரன் நீதான். உனக்கு தினந்தோறும் இரண்டு கொத்து திராட்சைப் பழம் தருகிறேன்'' என்றான்.
வேலைக்குத் தகுந்த ஊதியம் கிடைப்பதை நினைத்து நரி மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. தோட்டக்காரனைப் பார்த்து 'மிக்க மகிழ்ச்சி' என்று கூறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.