ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்குப் பகுதியில் மேக்ரப் என்றழைக்கப்படுகிற – மொராக்கோ, துனீஷியா, லிபியாவின் ஒரு பகுதி ஆகியவற்றையும் உள்ளடக்கிய - பகுதியில் இடம்பெற்றிருக்கும் நாடு அல்ஜீரியா. வடகிழக்கே துனீஷியா, கிழக்கே லிபியா, தென்கிழக்கே நைஜர், தென்மேற்கே மாலி, மேற்கே மொராக்கோ, வடக்கே மத்திய தரைக் கடல்.
கி.மு. 3000-ல் ஐரோப்பா அல்லது ஆசியாவிலிருந்து பெர்பர்கள் இங்கே குடியேறியிருக்கின்றனர். கி.மு. 1100-ல் மத்திய தரைக் கடலின் கிழக்குப் பகுதியிலிருந்து பினீஷியர்கள் கடல்வழி வந்து சேர்ந்திருக்கின்றனர்.
கி.மு. 200-ல் இங்கே அரசு அமைக்க, அரசராக ஆட்சி செய்ய ரோமானியர்கள் உதவியிருக்கின்றனர். கி.மு. 46-லிருந்து இது ரோமானியாவின் பகுதி. கி.பி. 600-களில் அரபுகள் நுழைகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து இஸ்லாமும். பெர்பர்களும் இஸ்லாமைத் தழுவுகிறார்கள். மேக்ரப் முழுவதுமே அரபுப் பண்பாடும் மொழியும் பரவுகிறது.
கி.பி. 1500-களில் கடற்கரைப் பகுதிகளை ஸ்பானிய கிறிஸ்துவர்கள் பிடிக்கின்றனர். பின்னர், துருக்கியின் ஓட்டோமான் பேரரசின் கீழ் வருகிறது. 1830-ல் பிரான்ஸின் பிடிக்குள் வருகிறது வடக்கு அல்ஜீரியா. ஐரோப்பியர்கள் ஏராளமாகக் குடியேறினர். அவர்களுக்கு பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டது. 1914-ல் அல்ஜீரியா முழுவதுமே பிரான்ஸின் கட்டுப்பாட்டில்.
1954, நவ. 1-ல் அல்ஜீரிய மக்கள் அமைப்பான தேசிய விடுதலை முன்னணி (எப்எல்என் – நேஷனல் லிபரேஷன் ஃபிரன்ட்) பெரும் புரட்சியை முன்னெடுத்தது. நெடிய போராட்டம், தாக்குதல்கள், குண்டுவீச்சுகள், படுகொலைகள். பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய குடியேறிகள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு முகாம்களில் அல்ஜீரியர்கள் வதைக்கப்பட்டனர். போராளித் தலைவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர், கொல்லப்பட்டனர்.
இரு தரப்பிலுமாக சண்டையில் 2.50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், 1962, ஜூலை 3-ல் அல்ஜீரியாவுக்கு விடுதலையளித்தது பிரான்ஸ். சோசலிச அரசு உதயமானது. ஆனால், பிறகும் உள்நாட்டுக் குழப்பங்கள், வன்முறைகள்.
2019 டிசம்பரில் அப்துல்மஜித் தெபூன் அதிபரானார். 2024-ல் இரண்டாவது முறையாகவும் அவரே வெற்றி பெற்றிருக்கிறார். இவருக்கு எதிராகத் தேர்தல் முறைகேடு புகார்களைக் கூறியிருக்கின்றன எதிர்க்கட்சிகள்.
சூடான் பிரிந்ததைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவின் பெரிய நாடாகிவிட்டது அல்ஜீரியா. நாட்டின் பெரும்பான்மையான மக்கள், கிட்டத்தட்ட 90 சதவிகிதம், மத்திய தரைக் கடலையொட்டிய டெல் என்றழைக்கப்படும் பகுதியில் வாழ்கின்றனர். நல்ல தட்பவெப்பம், சுமாரான மழை. இதையே நாட்டின் இதயமெனலாம். மற்றபடி நாட்டின் பெரும் பகுதி சஹாரா பாலை, பாறை, வறட்சி.
மொழி, பழக்க வழக்கங்களைப் பொருத்து மக்கள், அரபு அல்லது பெர்பெர் எனப்படுகிறார்கள். 20 சதவிகித மக்கள் பெர்பெர் மொழி பேசினாலும் அனைவரும் முஸ்லிம்களே.
அல்ஜீரிய பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்களிப்பு 6 சதவிகிதம்தான் என்றாலும் சுமார் 30 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் வேளாண் தொழிலையே சார்ந்திருக்கின்றனர். உணவுப் பொருள்களில் மூன்றிலொரு பங்கை இறக்குமதி செய்கிறது அல்ஜீரியா.
உடை போன்ற விஷயங்களில் பெண்கள் பெரும்பாலும் இஸ்லாமிய வளமைகளைக் கடைப்பிடித்தாலும் படித்தவர்களும் இளையோரும் மேற்கத்திய பாணியையும் கடைப்பிடிக்கிறார்கள். ஊடகங்கள், கல்வித் துறை, நிர்வாகம் போன்றவற்றில் எல்லாம் பரவலாக பிரெஞ்சு மொழி பயன்படுத்தப்பட்டாலும் அலுவல் மொழி அல்ல; அரபிதான் அரசு மொழி.
நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர், அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசு. தலைநகர் அல்ஜீயர்ஸ், பரப்பு – 23.8 லட்சம் சதுர கி.மீ., மக்கள்தொகை – சுமார் 4.7 கோடி. 99 சதவிகித மக்கள் சன்னி முஸ்லிம்கள். மற்றவர்கள் ஒரு சதவிகிதம்தான்.
புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யு பிறந்தது இந்த நாட்டில்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.