வீரவநல்லூரில் தற்கொலை செய்த மாணவன் உடலுடன் பொதுமக்கள் மறியல்
அம்பாசமுத்திரம், ஆக. 28: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் திங்கள்கிழமை பூந்தொட்டியை உடைத்ததற்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டதால் மனமுடைந்த மாணவன் வெ. சுஜித்குமார் (16) தூக்கிட்டு தற்கொலை செய்து
அம்பாசமுத்திரம், ஆக. 28: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் திங்கள்கிழமை பூந்தொட்டியை உடைத்ததற்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டதால் மனமுடைந்த மாணவன் வெ. சுஜித்குமார் (16) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவன் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வீரவநல்லூர் நயினார்காலனியை சேர்ந்த வெள்ளத்துரை மகன் சுஜித்குமார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன் பள்ளியில் பூந்தொட்டியை உடைத்தற்காக மாணவன் சுஜித்குமார் உள்ளிட்ட 44 மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் தலா ரூ. 1,000 அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து அண்மையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் அபராதம் செலுத்தாத மாணவர்களை செலுத்துமாறு பள்ளி தரப்பில் நிர்ப்பந்தம் செய்தனராம். இதில் மனமுடைந்த மாணவன்
சுஜித்குமார் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
சுஜித்குமார் தற்கொலை செய்த தகவலறிந்த அவரது உறவினர்கள், நயினார்காலனியை சேர்ந்த பொதுமக்கள் மாணவனின் உடலை வைத்து திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் வீரவநல்லூரில் திரையரங்கு முன்பு மறியலில் ஈடுபட்டனர். ஆண்களும் பெண்களும் 300 க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு
ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.
பள்ளி நிர்வாகி, தலைமையாசிரியர், ஆசிரியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். சேரன்மகாதேவி துணை ஆட்சியர் ரோஹ்னிராம்தாஸ், அம்பை டி.எஸ்.பி. மு. முத்துசங்கரலிங்கம், சேரன்மகாதேவி டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை
நடத்தினர். இதையடுத்து பிரேத பரிசோதனை செய்ய மாணவனின் உடலை எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.
மறியல் போராட்டத்தினால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன. பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றதால் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று தங்கள் குழந்தைகளை அழைத்து சென்றனர். மாணவன் தற்கொலை சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர். வீரவநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.