வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் : ஜி.கே.மணி
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
ஈரோட்டில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தருமபுரி கலவரத்துக்கு பாமக தான் காரணம் என திமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இக்கலவரம் தொடர்பாக இதுவரை 164 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் திமுக, அதிமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கட்சியினர்தான்.
தலித்துக்கு எதிரானது பாமக என தவறான முத்திரை குத்துவதற்காக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரை கருணாநிதி கருவியாக பயன்படுத்தி வருகிறார்.
தலித்களுக்கு 18 சதவீதமாக இருக்கும் இடஒதுக்கீட்டை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது பாமகதான். இப்போதும் தலித் மக்களுக்கு எதிரான நிலையை பாமக ஒரு போதும் எடுக்காது.
ஆனால், தலித் என்ற போர்வையில் சிலர் பிற சமுதாயத்தில் உள்ள வசதிப்படைத்த குடும்பங்களில் இருக்கும் இளம்பெண்களை காதலிப்பது போல நடித்து கடத்திச்சென்று பணம் பறிப்பதை பாமக எதிர்க்கிறது. பாமகவின் இந்த நிலைக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆதரவு பெருகியுள்ளது.
கலப்பு திருமணத்தை பாமக ஆதரிக்கிறது. அதேநேரத்தில் காதல் நாடகத்தை பாமக எதிர்க்கிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ஒரு சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாக பல்வேறு சமுதாயத்தினர் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே, இதில் சட்டத்திருத்தம் தேவை என பாமக வலியுறுத்துகிறது என்றார். பேட்டியின்போது பாமக மாநிலத் துணைப்பொதுச்செயலர் கா.சு.மகேந்திரன், மாவட்டச்செயலர்கள் பொ.வை.ஆறுமுகம் (மாநகர்), இரா.வடிவேல் (கிழக்கு) உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.