தற்போதைய செய்திகள்

களக்காடு முண்டன்துறை காப்பகத்தில் 17 புலிகள்: துணை இயக்குநர் தகவல்

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள களக்காடு முண்டன்துறை காப்பகத்தில் 17 புலிகள் இருப்பதாக காப்பக துணை இயக்குநர் சி. குருசாமி தெரிவித்தார்.

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா செல்வது குறித்து அரசு அனுமதி அளித்ததை அடுத்து வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இது குறித்து புலிகள் காப்பக துணை இயக்குநர் சி. குருசாமி அளித்த பேட்டி:

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அளித்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி கடந்த 4 ம் தேதி உள்ளூர் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேற்கொண்ட முடிவின் அடிப்படையில் அரசு அனுமதியுடன் புலிகள் காப்பகம் திறக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சென்று வரலாம். தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், சோப்பு, சாம்பு, எண்ணெய், மது வகைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், பீடி, சிகரெட், தீப்பெட்டி போன்ற பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. மீறினால் அபராதம் விதிக்கப்படும். மேலும் காப்பகத்தில் சுயஉதவிக்குழுக்கள் மூலம் இயங்கும் கடைகள் தவிர வேறு கடைகளுக்கு அனுமதியில்லை.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் வசிப்பவர்கள் தவிர பிறர் அங்கு செல்ல உரிய அனுமதி பெற்று செல்லலாம். முண்டன்துறை, மணிமுத்தாறு ஓய்வு விடுதிகளில் முன் பதிவு அடிப்படையில் சுற்றுலாப் பயணிகள் தங்கலாம். குதிரைவெட்டி ஓய்வு விடுதியில் தங்க அனுமதியில்லை.

மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கலாம். பாபநாசம் அணையில் மோட்டார் படகு இயக்காமல் வேறு வழியில்படகு சவாரி செய்வது குறித்து பரிசீலனையில் உள்ளது. முடிவு செய்த பின்னர் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

காப்பகம் அமைந்துள்ள 895 சதுர கி.மீ பரப்பளவில் புலிகள் வாழிடங்கள் நவீன கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 17 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் சுற்றுலாப் பயணிகள் காப்பகத்தினுள் சுற்றுலா சென்று ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.

மரம் வெட்டியவர் மீது நடவடிக்கை: பாபநாசத்தில் காரையார் வனப்பகுதியில் இருந்து சிலர் தேக்கு மரம் வெட்டியதாக புகார் கூறப்பட்டது. அவ்வாறு மரங்கள் வெட்டப்பட்ட பகுதியினை நேரில் சென்று பார்வையிட்டேன். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை இயக்குநர் குருசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT