துரை தயாநிதி உட்பட 15 பேருக்கு முன் ஜாமீன் : பிடிவாரண்டும் ரத்து
கிரானைட் முறைகேட்டு வழக்கில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி மீதான பிடிவாரண்ட் ரத்து. முன் ஜாமீனை அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கிரானைட் முறைகேட்டு வழக்கில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி மீதான பிடிவாரண்ட் ரத்து. முன் ஜாமீனை அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார். இதில் நாகராஜன் உப்பட பலர் பங்குதாரர்களாக இருந்தனர். இதில் இருந்த துரை தயாநிதி பங்குதாரர் பொறுப்பில் இருந்து விலக்கிக் கொண்டார்.
இந்த நிலையில், பிஆர்பி கிரானைட் உள்ளிட்ட பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள் மற்றும் கனிமவள நிறுவனத்துக்குச் சொந்தமான மலைகளையும் ஆக்ரமிப்புச் செய்து பல ஆயிரம் கோடி கிரானைட் கற்களை வெட்டிக் கடத்தியதாக 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் மீதும் பதிவான வழக்கில் தலைமறைவாக இருந்த துரைதயாநிதிக்கு மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. தன் மீதான பிடியாணையை ரத்து செய்யக் கோரியும், முன் ஜாமீன் வழங்கக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இதேப்போன்று சிந்து கிரானைட் அதிபர். டி.கே. செல்வராஜ், அவர் மனைவி மற்றும் மகன்களுக்காகவும், மதுரா கிரானைட் உரிமையாளர் ரஃபீக் உள்ளிட்ட 9 பேரும் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம், துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேரது முன் ஜாமீன் மனுக்களை அனுமதித்து அனைவரும் சம்பந்தப்பட்ட கீழவளவு காவல்நிலையத்தில் தினசரி 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திடுமாறு உத்தரவிட்டார்.
மேலும், துரை தயாநிதி மீது மேலூர் மேஜிஸ்ட்டிரேட் பிறப்பித்த பிடியாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.