தற்போதைய செய்திகள்

நலிவடையும் மண்பாண்டத் தொழில்

கிராமங்களில்கூட பொங்கல் பண்டிகை நவீன யுகத்துக்கு மாறிவிட்டதாலும், அரசின் பல்வேறு கெடுபிடிகளாலும் மண்பாண்டத் தொழில் நலிவடைந்து வருகிறது.

ஆர். முருகன்

கிராமங்களில்கூட பொங்கல் பண்டிகை நவீன யுகத்துக்கு மாறிவிட்டதாலும், அரசின் பல்வேறு கெடுபிடிகளாலும் மண்பாண்டத் தொழில் நலிவடைந்து வருகிறது.
தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையாகவும், வீரத்தை பறைசாற்றவும், உழவுக்கு கை கொடுத்த இறைவனுக்கு (சூரியன்) நன்றி தெரிவிக்கும் பண்டிகையாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் என்றாலே புது நெல், புதுப் பானை என்பது மாற்ற முடியாத ஒன்றாக இருந்து வந்தது. புதுப் பானை என்பது களிமண்ணால் செய்த பானைகளை வாங்கி வந்து பொங்கல் சமைப்பதாகும். வீட்டு வாசலில் அடுப்பு வைத்து புதுப் பானையில் பொங்கலிடுவர். கால்நடைகள் வளர்ப்போர் தொழுவத்தில் கோலமிட்டு புதுப் பானையில் பொங்கலிடுவர்.
ஆனால், நாகரிக மாற்றத்தால் மண்பானை மறந்து பித்தளை, சில்வர், அலுமினியப் பாத்திரங்களுக்கு நகர மக்கள் மாறிவிட்டனர். இப்போது கிராமங்களுக்கும் சமையல் எரிவாயு அடுப்பு வந்துவிட்டதால், நகர மக்கள் மாறியதைப் போன்று கிராம மக்களும் மண் பானையை மறந்துவிட்டனர்.
கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மட்டுமே தொழுவத்தில் பொங்கலிட மண் பானைகளைப் பயன்படுத்துகின்றனர். இதன்காரணமாக, மண்பாண்டத் தொழில் ஆண்டுக்கு, ஆண்டு நலிவடைந்த வண்ணம் உள்ளது.
தருமபுரி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 வட்டங்களிலும் நகரப் பகுதியை ஒட்டிய கிராமப்புறங்களில் ஆங்காங்கே மண்பாண்டத் தொழில் செய்யும் குடும்பங்கள் பாரம்பரியமாக இருந்து வருகின்றன. ஆனால், இவர்களுக்கு போதிய வருவாய் இல்லை.
ஏனெனில், பானைகள் செய்ய மண் எடுத்துச் செல்ல பெரிதும் சிரமப்படுகின்றனர். குடிசைத் தொழிலுக்காக எடுத்துச் செல்லப்படும் மண்ணை அனுமதியின்றி எடுத்துச் செல்வதாக வருவாய்த் துறையினர் பிடித்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கும் நிலையுள்ளது.
இதனால், தங்களது தேவைக்கு வெளியே இருந்து மண் எடுத்துவர முடியாத சூழல் உள்ளது. மேலும், மண்பாண்டத் தொழிலுக்கு அரசு எந்தவித மானியமோ, உதவியோ அளிப்பதில்லை எனவும் குறை கூறுகின்றனர் மண்பாண்டத் தொழிலாளர்கள்.
தருமபுரியை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் 3 தலைமுறைகளுக்கும் மேலாக மண் பானை செய்யும் தொழில் ஈடுபட்டு வரும் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடேசன் கூறியது:
முன்பு பொங்கல் பண்டிகை என்றால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 5 மண் பானைகள் வாங்குவர். கால்நடைகள் வைத்திருந்தால் அதன் எண்ணிக்கைக்கு தகுந்தபடி 15 முதல் 20 பானைகள் கூட வாங்குவர்.
இப்போது, சமையல் எரிவாயு அடுப்பிலும், பாத்திரங்களிலும் பொங்கல் என்றாகிவிட்டதால் மண் பானை விற்பனை சரிந்துவிட்டது. மரக்கன்றுகளில் மண் சட்டிகள் பயன்படுத்தி வந்த நிலையும் மாறி பிளாஸ்டிக் பைகளுக்கு மாறிவிட்டனர். இதனால், அரசு மூலம் கிடைத்து வந்த மரக்கன்றுகளுக்கான சட்டிகள் தயாரிப்பும் நின்றுவிட்டது. மண் எடுத்து வர வருவாய்த் துறையினர் கெடுபிடியால் பெரிதும் சிரமம் உள்ளது.
ஒரு மாட்டு வண்டி மண்ணை பயன்படுத்தி 50 பானைகள் உற்பத்தி செய்யலாம். இதற்கு செலவு கூலி ஆள்கள் உள்பட ரூ.5 ஆயிரம் ஆகிறது. ஆனால், 50 பானைகள் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையாவதே கேள்விக்குறியாக உள்ளது. பொங்கல் பண்டிகை காலத்தில் பானை வாங்கும் ஒரு சில கிராம மக்களை நம்பியே ஆண்டு முழுவதும் இந்தத் தொழிலை நடத்தி வருகிறோம். அரசு உதவியோ, மானியமோ அளித்தால் இந்தத் தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன்பெறும்.
குறைந்தபட்சம் எந்தவிதக் கெடுபிடியும் இல்லாமல் மண் கிடைப்பதற்காக வருவாய்த் துறை உதவ வேண்டும் என்றார் அவர்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT