ஒன்றியத் தேர்தலில் வாக்குச் சீட்டைக் கிழித்துப் போட்ட கவுன்சிலருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியத் தேர்தலின்போது, ஓட்டுச் சீட்டைக் கிழித்துப் போட்ட கவுன்சிலருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, அதனை தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியத் தேர்தலின்போது, ஓட்டுச் சீட்டைக் கிழித்துப் போட்ட கவுன்சிலருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, அதனை தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சேடப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களுக்கான ஒன்றிய துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில், 18 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.
இந்த ஒன்றியத் துணைத் தலைவர் தேர்தலில் சீனிவாசன் என்ற கவுசிலரும், சாந்தகுமாரி என்ற கவுன்சிலரும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலின்போது, சீனிவாசனுக்கு ஆதரவாக 9 ஓட்டுகளும், சாந்தகுமாரிக்கு ஆதரவாக 8 ஓட்டுகளும் விழுந்தன. ஒரு ஓட்டு செல்லாத ஓட்டாகிவிட்டது. இதனை உறுதி செய்து வெளியிட்டார் தேர்தல் அதிகாரி.
ஆனால், தான் தோற்றது தெரிந்தவுடன் சாந்தகுமாரி வாக்குச்சீட்டுகளை கிழித்து எறிந்து ரகளையில் ஈடுபட்டார். இதை அடுத்து தேர்தல் அதிகாரி தேர்தலை நிறுத்தி வைத்தார்.
இந்நிலையில் மீண்டும் சாந்தகுமாரி தரப்பு தாமாகவே ஒரு தேர்தலை வைத்து அவர்தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாம். இந்நிலையில், சீனிவாசன் இந்த விஷயத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று, உரிய நடவடிக்கை கோரி வழக்கு தொடுத்தார்.
இது தொடர்பான விசாரணை நீதிபதி தமிழ்வாணன் முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தில் நடைபெற்ற சம்பவங்களை எல்லாம் வீடியோவாகப் பதிவு செய்து, அந்த சி.டி.யினை நீதிமன்றத்தில் போட்டுக் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை ஒரு ஆதாரமாக சீனிவாசன் தனது தரப்பில் இருந்து அளித்திருந்தார்.
இரு தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் இந்த சி.டி.யைப் போட்டுப் பார்த்து, சாந்தகுமாரி ரகளையில் ஈடுபடுவதையும், ஓட்டுச் சீட்டுகளை கிழித்தெறிந்து ஆர்ப்பாடம் செய்வதையும், பெட்டிகளை உடைப்பதையும் கண்ட நீதிபதி, இன்று தனது தீர்ப்பினை அளித்தார்.
இந்தத் தேர்தலில் சீனிவாசன் வெற்றி பெற்றார், என்றும் சாந்தகுமாரி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டது தெரிந்ததால் அவர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு இழப்பு ஏற்பட்டதால் ரூ.50 ஆயிரம் அபராதத்தை தேர்தல் ஆணையத்துக்கு அவர் அளிக்க வேண்டும் என்றும், இன்னும் 2 வார காலத்துக்குள் சீனிவாசன் வெற்றி பெற்றார் என்பதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்றும், ரகளையில் ஈடுபட்டு சேதம் விளைவித்த சாந்தகுமாரி மீது உரிய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார் நீதிபதி தமிழ்வாணன்.
இதில் குறிப்பிடத் தக்க விஷயம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், ஒரு ஆதாரத்தை சிடி மூலமாகப் பார்த்து தீர்ப்பு சொல்லப்பட்டது இதுவே முதல்முறை!