முகப்பு
தற்போதைய செய்திகள்

திருநள்ளாறு கோவிலில் சனிக்கிழமை நாளில் நிறுத்தப்பட்ட அபிஷேகம் மீண்டும் தொடக்கம்: தரிசிக்க முடியாமல் பக்தர்கள் அவதி

திருநள்ளாறு கோவிலில் சனிக்கிழமை நாளில் நிறுத்தப்பட்டிருந்த சனிபகவானுக்குரிய அபிஷேகம் சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் வரிசையில் செல்லும் பக்தர்கள் அபிஷேக நேரத்தில் திருப்தியாக தரிசனம் செய்யமுடியாமல் அவதிக்குள்ளாயினர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

திருநள்ளாறு கோவிலில் சனிக்கிழமை நாளில் நிறுத்தப்பட்டிருந்த சனிபகவானுக்குரிய அபிஷேகம் சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் வரிசையில் செல்லும் பக்தர்கள் அபிஷேக நேரத்தில் திருப்தியாக தரிசனம் செய்யமுடியாமல் அவதிக்குள்ளாயினர்.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசிக்க வாரத்தில் சனிக்கிழமை நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். தினமும் சனீஸ்வரபகவானுக்கு கட்டணம் செலுத்தி முன் பதிவு முறையில் சிறப்பு அபிஷேகம் செய்ய பக்தர்கள் வருவர். முக்கிய நாளான சனிக்கிழமையிலும் அபிஷேகம் செய்ய பக்தர்கள் முன் பதிவு செய்வர். சனிக்கிழமை நாளில் 5 வேளைகள் அபிஷேகம் செய்யவேண்டி இருப்பதால், கட்டணம் செலுத்தியோர் சன்னிதியில் உட்கார்ந்து தரிசனம் செய்வர். பின்புறமாக நீண்ட வரிசையில் செல்வோர் சுவாமியை தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டதால், கடந்த 2011 டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்ற சனிப்பெயர்ச்சி நாள் முதல் சனிக்கிழமையில் அபிஷேகம், பெரும்பான்மையான பக்தர்கள் நலன் கருதி அப்போதைய நிர்வாகம் நிறுத்தியது.

ஆனால் திடீரென நிறுத்தப்பட்ட அபிஷேகத்தை கோவில் நிர்வாகம் சனிக்கிழமை (15-12-2012) முதல் மீண்டும் செயல்படுத்தத் தொடங்கியது. சனிக்கிழமை நாளில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசனம் செய்தனர். இந்த நிலையில், நீண்ட வரிசையில் செல்வோர் அபிஷேகத்தின்போது சுவாமியை தரிசிக்க முடியாமல் ஆங்காங்கே சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் அபிஷேகம் முடியும் வரை காத்திருக்க நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து திருநள்ளாறு கோவில் நிர்வாக அதிகாரி ஏ.ராஜராஜன் வீராசாமியிடம் கேட்டபோது, கடந்த ஓராண்டாக சனிக்கிழமையில் அபிஷேகம் நிறுத்தப்பட்டிருந்தது. பக்தர்கள் விரும்பி சனிக்கிழமையில் அபிஷேகம் செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டதால் மீண்டும் தொடங்கினோம். காலை 5, 6 மற்றும் 7, பகல் 12, மாலை 5.30 மணி என்ற கணக்கில் 5 வேளை அபிஷேகம் செய்யப்படும். அப்போது சிறிது நேரம் பொது தரிசனம் நிறுத்தவேண்டியிருக்கும். இதை பக்தர்கள் பொருத்துக்கொண்டுதானாகவேண்டும். கால் மணி முதல் அரை மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க முடியவில்லையென்றால் அதை எப்படி கருதுவதென்றே தெரியவில்லை. மேலும் மழைவேண்டி கோவிலில் உள்ள நந்திக்கு வருண ஜபம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது. இதுவும் கோவிலை சுற்றியுள்ள 5 கிராம மக்கள் வேண்டுகோள்படி செய்யப்படுகிறது என்றார்.

கோவில் நிர்வாக அதிகாரி, எந்தவொரு திட்டத்தையும் அமல்படுத்தும்போது முன்னதாகவே கோவிலின் மூத்த ஊழியர்கள், அனுபவசாலிகளிடம் கலந்தாலோசிப்பதில்லை. திட்டம் அமல்படுத்தி, பக்தர்கள் ஏதேனும் அதிருப்திகொண்ட பிறகு கருத்துகளை கேட்கிறார். இந்த போக்கு திருநள்ளாறு கோவிலின் வளர்ச்சிக்கு உகந்தது இல்லையென கோவில் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →