முகப்பு
தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு நிவாரணம் குறித்து கருணாநிதி கோரிக்கையை புதுவை மாநிலத்திலும் நிறைவேற்றவேண்டும்: நாஜிம் வலியுறுத்தல்

தமிழக விவசாயிகளுக்காக திமுக தலைவர் மு.கருணாநிதி நிவாரணம் குறித்த கோரிக்கையை, புதுவை அரசு காரைக்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமல்படுத்தவேண்டுமென நாஜிம்

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

தமிழக விவசாயிகளுக்காக திமுக தலைவர் மு.கருணாநிதி நிவாரணம் குறித்த கோரிக்கையை, புதுவை அரசு காரைக்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமல்படுத்தவேண்டுமென நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.

காரைக்கால் திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் இதுகுறித்து வியாழக்கிழமை கூறியது : பருவமழை பொய்த்து, காவிரித் தண்ணீர் காரைக்காலுக்குரியது முறையாக வராத நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் விவசாயம் பெருமளவு பாதித்துவிட்டது. எனவே காரைக்காலை வறட்சி மாவட்டமாக அறிவிக்குமாறு புதுவை அரசை திமுக வலியுறுத்தியதை அரசு செய்யவில்லை. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் தருமாறு கோரியதையும் அரசு செய்யவில்லை.

நீர்நிலைகள் இருக்கும் வட்டாரத்தில் சுமார் 2400 ஹெக்டேர் விவசாயம் செய்யப்பட்டிருப்பதாகவும், இப்பயிருக்குத் தேவையான தண்ணீரை நீர்நிலைகளில் இருந்து எடுத்துக்கொள்ள ஹெக்டேருக்கு 30 லிட்டர் டீசல் இலவசமாக தரப்படுமென வேளாண் அமைச்சர் அறிவித்தார். இதற்கு ரூ.36 லட்சம் தேவையென மதிப்பீடு தயார் செய்யப்பட்டும், இந்த அறிவிப்பு தண்ணீரில் எழுதப்பட்டதாகவே போய்விட்டது. இந்த நிலையில் காரைக்கால் விவசாயிகள் சொல்லமுடியாத துயரத்தை சந்தித்து வருகின்றனர். புதுச்சேரி வேளாண் செயலரை நேரில் சந்தி்த்து, இப்பிரச்னைகள் குறித்து விளக்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். இதுவரை அரசு விவசாயிகள் பிரச்னையில் அக்கறை செலுத்தாததை திமுக வன்மையாக கண்டிக்கிறது.

இதுபோன்ற பாதிப்பு தமிழகப் பகுதியிலும் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம், விவசாயத் தொழிலாளருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் தரவேண்டுமென தமிழக அரசை திமுகத் தலைவர் மு.கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கை அண்டை மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம் வரை அமல்படுத்தப்பட்டால், புதுவை மாநிலத்தின் மாவட்டமான காரைக்கால் விவசாயிகளும் அதே பயனை அடைய அனைத்து சாத்திய்கூறுகளும் உள்ளன. பயில் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேராத குத்தகை சாகுபடிதாரர்களும் அரசின் பயனை பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். எனவே புதுவை முதல்வர், திமுக தலைவர் கோரிக்கையை புதுவை மாநிலத்தில் காரைக்கால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றவேண்டுமென காரைக்கால் திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார் நாஜிம்.

முழு கட்டுரையைப் படிக்க →