முகப்பு
தற்போதைய செய்திகள்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: தேமுதிகவுக்கு சிபிஎம் ஆதரவு

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் மக்களுக்கு பாதிப்பு தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது....

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:18 PM
பகிர்:

நாகப்பட்டினம், பிப். 24: சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்.

நாகையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கக் கோரி,   தேமுதிக தலைவர் விஜயகாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதம் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவில் விவாதிக்கப்பட்டது.

மத்திய காங்கிரஸ் அரசு கடைபிடிக்கும் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மக்கள் நலனுக்கு எதிரான பாதிப்புகளை ஏற்படுத்தியதில், மத்திய காங்கிரஸ் அரசில் அங்கம் வகிக்கும் கட்சி என்ற வகையில், திமுகவுக்கும் பங்கு உள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீது மக்களுக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.  ஆனால், மக்கள் எதிர்பார்ப்புகளை அதிமுக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை. மாறாக, தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் மக்களுக்கு பாதிப்பு தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் சங்கரன்கோவில் இடைத் தேர்தல் நடைபெறுவதால், இந்த இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு முடிவெடுத்துள்ளது.

தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவுக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு அளவில் பிரசாரத்தில் ஈடுபடும்.

அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பால் விலை உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டம் நடத்தியது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும்.

மக்கள் நலனை பாதிக்கும் பிரச்னைகளுக்கான போராட்டங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான போராட்ட அறிவிப்புகளை மார்க்சிஸ்ட் விரைவில் வெளியிடும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்.

முழு கட்டுரையைப் படிக்க →