முகப்பு
தற்போதைய செய்திகள்

மணல் அள்ளுவதால் விளைநிலம் பாதிப்பு: காரைக்காலில் தாய், மகன் தற்கொலை முயற்சி

காரைக்கால், ஜூலை 30 : வருவாய்த்துறை, காவல்துறையின் அலட்சியப்போக்கை கண்டித்து காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய், மகன் திங்கள்கிழமை இன்று காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். காரைக்கால் மாவட்டம்

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:18 PM
பகிர்:

காரைக்கால், ஜூலை 30 : வருவாய்த்துறை, காவல்துறையின் அலட்சியப்போக்கை கண்டித்து காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய், மகன் திங்கள்கிழமை இன்று காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதி தென்னங்குடி கிராமத்தை சேர்ந்த பெத்தபெருமாள் மகன் முத்துசெல்வம் மற்றும் அவரது தாய் மணியம்மாள் ஆகியோர் திங்கள்கிழமை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுவுடன் வந்தனர்.

திடீரென அலுவலக வாயிலுக்கு வந்த இவர்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீவைக்க முயன்றனர். ஆட்சியர் அலுவலக வாயில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் இவர்களை தடுத்தார். கையில் வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை பிடுங்கி எறிந்தார். தகவலின்பேரில் காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸார் விரைந்து வந்தனர்.

இருவரின் உடல் மீது தண்ணீரை ஊற்றி, நகரக் காவல்நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது முத்துசெல்வம் கூறியது :

தென்னங்குடி கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான விளைநிலம் உள்ளது. நிலத்திற்கு அருகாமையில் வருவாய்த்துறையின் அனுமதியின்றி ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு சுமார் 6 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்படுகிறது. இதனால் எங்களது விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 70 லாரிகளில் மணல் அள்ளப்பட்டுள்ளது. இப்பணியி்ல ஈடுபட்டோரிடம் கேட்கும்போது எங்களை மிரட்டுகின்றனர்.

வருவாய்த்துறை அனுமதிக்காதபோது மணல் அள்ளுவது குற்றம், இதனால் எங்களது விளைநிலம் பாதிக்கப்படுகிறததென திருநள்ளாறு வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருநள்ளாறு காவல்நிலையத்திலும் புகார் தெரிவித்தால் வாங்க மறுக்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர், சார்பு ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. தினமும் விளைநிலம் பாதிக்கும் வகையில் மணல் அள்ளப்படுவதால், எதிர்காலத்தில் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஆளும்கட்சியை சேர்ந்தவர் என்பதால், அரசுத் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனாலேயே இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக அவர் தெரிவித்தார். காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இச்சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

முழு கட்டுரையைப் படிக்க →