கிராம மக்களிடம் நூதன முறையில் 5 செல் போன்கள் திருடியவர்
ஸ்ரீவில்லிபுத்தூர், மே 6: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமத்தினரை நூதன முறையில் ஏமாற்றி 5 விலை உயர்ந்த செல்போன்களை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர், மே 6: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமத்தினரை நூதன முறையில் ஏமாற்றி 5 விலை உயர்ந்த செல்போன்களை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், காந்திநகரில் சாலை ஓரம் பெட்டிக் கடை வைத்திருப்பவர் நரையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த இருளப்பன் (60). இவர் கடைக்கு சனிக்கிழமை பகலில் ஒரு நபர் வந்துள்ளார். அவரது பேச்சு திருநெல்வேலி மாவட்ட மக்கள் பேசும் பேச்சு போன்று இருந்துள்ளது. மாடு பிடிக்கும் தொழில் பார்ப்பதாகவும், மாடுகள் கிடைக்குமா என்றும் கேட்டு பேச்சைத் தொடர்ந்துள்ளார்.
பின்னர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு வன்னியம்பட்டி விலக்கில் புதியதாக விடுதி கட்டியுள்ளார்கள். அதற்கு காவலர் பணிக்கு ஆள் தேவை. ரூ.20 ஆயிரம் முன்பணம், மாதம் ரூ.7 ஆயிரம் ஊதியம் என்றுள்ளார். இதனை அங்கிருந்த வெள்ளைச்சாமி மகன் குமாரவேல் என்பவர் கேட்டுக் கொண்டிருந்துள்ளார். அவர் ஊர் தலைவர் தி.கருப்பையாவிடம் வந்த நபரை அறிமுகம் செய்துள்ளார். இதனிடையே வேலைக்கு கிராமத்தில் போட்டி ஏற்பட்டுள்ளது.
வந்த நபர் வேலைக்கு சேர்வதற்கு புதியதாக வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். வங்கிக் கணக்குத் தொடர தற்போது ஒருவருக்கு மூன்று IMEI எண் கொண்ட செல்போன்களும், அதன் ரகசிய எண்ணும் கண்டிப்பாக வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி விலை உயர்ந்த 3 செல்போன்களை ஊர் தலைவர் கருப்பையா தனது உறவினர்கள் வீடுகளில் இருந்து தயார் செய்துள்ளார். இருளப்பன் தனது பிள்ளைகளின் இரு செல்கள் மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார். வந்ந்த நபர் எனது செல்போன் IMEI எண்ணையும் சேர்த்து கொடுத்து விடலாம் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து வந்த நபர் ஊர் தலைவர் கருப்பையா, இருளப்பன் மற்றும் கருப்பையா மகன் கணேசன் ஆகியோர் ஓரு பையில் 5 செல்போன்கள், ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மார்கெட் பஜாரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ஆட்டோவில் வந்துள்ளனர். அங்கு கீழே நின்று கொண்டு செல்போனில் ஒரு பெண்ணிடம் வந்த நபர் பேசியுள்ளார். பின்னர் நீங்கள் மேலே வங்கியில் போய் இருங்கள் ஒருவர் வந்து உங்களைச் சந்தித்து வங்கிக் கணக்கு தொடங்க உதவி செய்வார் என்று கூறியுள்ளார். இதனை நம்பி மூவரும் வங்கியில் உட்கார்ந்திருந்துள்ளனர். கணேசன் தனது தந்தையிடம் ரெம்ப நேரமாகிவிட்டது. நான் போகிறேன் என்று கூறி வெளியே சென்று விட்டார். நேரமாகியும் யாரும் வராததால் கருப்பையாவும், இருளப்பனும் கீழே இறங்கி வந்துள்ளனர். இவர்களை அழைத்து வந்த நபர், இருளப்பனிடம் அஞ்சல் அனுப்ப பயன்படுத்தும் ஸ்டாம்பு வாங்கி வரச் சொல்லியுள்ளார். அவர் சென்றுவிட்டார். செல்போன்கள் இருந்த பையுடன் இருந்த கருப்பையாவிடம் நீங்கள் ரேஷன் கார்டை ஜெராக்ஸ் எடுத்து வாருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார். பையுடன் புறப்பட்ட அவரிடம், பையை நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பி பையை கருப்பையா அவரிடம் ஒப்படைத்துவிட்டு ஜெராக்ஸ் எடுக்கச் சென்றுள்ளார்.
ஸ்டாம் வாங்கி வந்தவரும், ரேஷன் கார்டு ஜெராக்ஸ் எடுத்து வந்தவரும் திரும்பி வந்து, அழைத்து வந்த நபரை தேடியுள்ளார்கள். காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கருப்பையா புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகிறார்கள்.