காரைக்காலில் நைஜீரிய நாட்டினரின் மோசடி: சி.பி.ஐ. விசாரணை நடத்த பாஜக வலியுறுத்தல்
காரைக்காலில் தொடரும் நைஜீரிய நாட்டினரின் மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது.
காரைக்காலில் தொடரும் நைஜீரிய நாட்டினரின் மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது.
புதுவை மாநில பாஜக தொழில் மற்றும் வர்த்தக அணியின் தலைவர் எம்.அருள்முருகன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது : புதுவை மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பிராந்தியங்களிலும் விதவிதமான மோசடி, முறைகேடு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. புதுச்சேரி பிராந்தியத்தில் கொலை, வெடிகுண்டு கலாசாரம் உள்ள நிலையில், காரைக்காலில் வழிப்பறி, வீடுபுகுந்து திருட்டு சர்வசாதாரணமாக நடந்துவருகின்றன. போலீஸார் குற்றச் செயல் புரிந்தோரை கண்டுபிடிக்க உரிய முயற்சிகள் எடுப்பதில்லை. இதனால் ஏராளமானோர் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்களை இழந்து தவித்துவருகின்றனர்.
இதுவொருபுறமிருந்தாலும் நூதன முறையிலான மோசடியும் காரைக்காலில் அதிகமாக நடக்கத் தொடங்கியுள்ளது. நைஜீரிய நாட்டினர் இந்தியாவிற்கு கல்விக்காகவும், மருத்துவ வசதிக்காகவும், சுற்றுலா என்ற காரணத்தைக்கூறி நுழைந்துள்ளனர். இவர்கள் நெட்வொர்க் அமைத்து நாடு முழுவதும், அமெரிக்க டாலராக கறுப்புத் தாளை மாற்றுவதாகவும், செல்போனில் பரிசு விழுந்ததாக எஸ்.எம்.எஸ். அனுப்பி பண மோசடியும் செய்துவருகின்றனர். காரைக்காலில் இந்த வழக்குகளில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதில்லை. நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியேற வாய்ப்பு கிட்டிவிடுகிறது. பிறகு அதே மோசடியில் ஈடுபட வாய்ப்புண்டாகிறது. இவர்கள் யார், எங்கெங்கு இதுபோன்ற நூதன மோசடியில் ஈடுபடுகிறார்கள், இவர்களுக்கு பின்புலமாக இருப்பவர்கள் யார் போன்ற விவரங்களை புதுச்சேரி போலீஸார் விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் மக்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக இந்த வழக்குகளை சி.பி.ஐ. ஏற்று விசாரணை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிடவேண்டும்.
காரைக்காலில் காவல்துறையினரின் பணியில் மெத்தனம் அதிகமாக உள்ளது. திருட்டு, வழிப்பறி போன்றவற்றை கண்டுபிடிக்க போதுமான சாதனங்கள் குறிப்பாக மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் இல்லதாது இவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது. புதுச்சேரி காவல்துறை தலைமை காரைக்கால் காவல்துறை அதிகாரிகளை அழைத்து, காரைக்கால் மக்களின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும். இல்லையெனில் காவல்துறை தலைமையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என்றார் அவர்.