முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவகங்கை அதிமுக பிரமுகர் கொலை வழக்கு: குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது- சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி தகவல்

சிவகங்கையில் அதிமுக பிரமுகர் அவரது மகன் உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பிச்சென்ற கொலையாளிகள் அடையாளம் தெரிந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் அவர்கள்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:37 PM
பகிர்:

சிவகங்கையில் அதிமுக பிரமுகர் அவரது மகன் உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பிச்சென்ற கொலையாளிகள் அடையாளம் தெரிந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சி.பி.சி.ஐ.டி கூடுதல் டி.ஜி.பி நரேந்திரபால்சிங் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையைச் சேர்ந்த அதிமுக மாவட்ட மாணவரணிச் செயலர் கதிரேசன், இவரது மகன் பிரசன்னா கார் டிரைவர் பூமிநாதன் ஆகிய மூவரும் சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை அருகே கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

கூலிப்படையினர் வெட்டியதில் கதிரேசன் மகள் நிகிலா காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக் கொலை சம்பவம் குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் பெரியகண்ணனூர் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் அர்ச்சுணன் இவரது மகன்கள், இத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ குணசேகரன் உள்ளிட்ட 32 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் அர்ச்சுணன் உள்ளிட்ட சிலரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் வழக்கில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள பலர் தலைமறைவாகிவிட்டனர். பெரியகண்ணனூர் ஊராட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாகவே கூலிப்படையினரைக் கொண்டு இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் வேறு காரணங்களுக்காகவும் கொலை நடந்துள்ளதா என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு  அதன் டி.ஐ.ஜி ஸ்ரீதர், எஸ்.பி ராஜேஸ்வரி சிவகங்கையில் முகாமிட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கூலிப்படையினர் பயன்படுத்திய லாரி மற்றும் பைக் ஆகியவை போலீசிடம் சிக்கியுள்ளன. இதில் லாரி மானாமதுரை பகுதியைச் சேர்ந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந் நிலையில் சி.பி.சி.ஐ.டி கூடுதல் டி.ஜி.பி நரேந்திரபால்சிங், ஐ.ஜி மஞ்சுநாதா ஆகியோர் சென்னையிலிருந்து சிவகங்கை வந்து கொலை வழக்கு தொடர்பாக நேரடியாக விசாரணை நடத்தினர். இவர்கள் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

பின்னர் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி ராமசுப்ரமணியம் எஸ்.பி பன்னீர்செல்வம் ஆகியோரிடம் வழக்கு தொடர்பாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.

அதன்பின் சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி நரேந்திரபால்சிங் நிருபர்களிடம் கூறியதாவது. சிவகங்கையில் அதிமுக பிரமுகர் கதிரேசேன் இவரது மகன் பிரசன்னா கார் டிரைவர் பூமிநாதன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 95 சதவீதம் விசாரணை முடிந்து விட்டது. விசாரணை நேர் வழியில் சென்று கொண்டிருக்கிறது. கொலையாளிகளை அடையாளம் கண்டுபிடித்துவிட்டோம். இன்னும் ஒரிரு நாட்களில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டு விடுவார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.