திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்:ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடந்த 13.ம் தேதி கந்தசஷ்டி விழா காப்புகட்டுதலுடன் துவங்கியது. சனிக்கிழமை சுப்பிரமணியசுவாமி கோவர்தனாம்பிகையிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்சம்ஹார லீலை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுப்பிரமணியசுவாமி தங்கமயில் வாகனத்திலும்,வீரபாகுத்தேவர் வெள்ளைக்குதிரை வாகனத்திலும் எழுந்தருளி மேலரத வீதி,கீழரத வீதி வழியாக சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு அசுரனான பத்மாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது.
பின்பு அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் நடைபெற்று மாலை மாற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.பின்பு சுவாமி அம்பாளுடன் பூச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திங்கள் அன்று தங்க கவசம்:
கந்தசஷ்டி விழாவின் 7.ம் நாளான திங்கள்கிழமை காலை 8 மணிக்கு மயில் வகனத்தில் சிறிய சட்ட தேரில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி ரத வீதி, கிரி வீதி வழியாக அருள்பாலிக்கிறார்.
மாலை 3 மணிக்கு மூலவரான சுப்பிரமணியருக்கு தங்ககவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.