வீரவநல்லூரில் மின்தடையை கண்டித்து துணை மின்நிலையம் முற்றுகை
வீரவநல்லூரில் வியாழக்கிழமை 18 மணி நேர மின்தடை கண்டித்து கிராம மக்கள் துணை மின்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு...
வீரவநல்லூரில் வியாழக்கிழமை 18 மணி நேர மின்தடை கண்டித்து கிராம மக்கள் துணை மின்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாப்பாக்குடி ஒன்றியம், அரிகேசவநல்லூர் ஊராட்சியில் சுமார் 5,000 பேர் வசித்து வருகின்றனர். மின்தடை காரணமாக கிராம ஊராட்சிகளில் மும்முனை மின்சாரம் குறைந்த நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
அரிகேசவநல்லூர் கிராமப் பகுதியில் பகலில் 3 மணி நேரம், இரவில் 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் கடந்த 15 தினங்களாக ஊராட்சி பகுதியில் வசி்க்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
இதனிடையே மின்தடை கண்டித்து வியாழக்கிழமை ஊராட்சி மன்றத் தலைவி ஜெயலட்சுமி தலைமையில் கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் வீரவநல்லூர் பிரதான சாலையில் உள்ள துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மும்முனை மின்சாரம் கூடுதலாக வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்களை கலந்து சென்றனர். இதேநிலை நீடித்தால் வருகிற 26 ம் தேதி (திங்கள்கிழமை) வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.