முக்கூடலில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் மறியல்
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் வெள்ளிக்கிழமை 14 மணி நேர மின்தடையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் வெள்ளிக்கிழமை 14 மணி நேர மின்தடையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களாக 14 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள், வர்த்தகர்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். மின் வெட்டு அதிக நேரம் நீடிப்பதால் குடிநீர் திட்டங்கள் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கூடலில் கடும் மின்தடை காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை 50 பெண்கள் உள்ளிட்டோர் முக்கூடலில் பிரதான சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்தடை தளர்த்த வேண்டும், அனைத்து பகுதிக்கும் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதில் ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் இசக்கிமுத்து, செயலர் அருணாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பாக்குடி ஒன்றியச் செயலர் த. சந்திரசேகர், செந்தில், மாரிசெல்வம் உள்ளிட்ட 100 பேர் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் பேரூராட்சித் தலைவர் ஆர். லட்சுமணன், சேரன்மகாதேவி டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தினால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.