பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்தது: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு,விவசாயிகள் மகிழ்ச்சி
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 8
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 8.70 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 5 அடியும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 6 அடியும், கடனாநதி அணை நீர்மட்டம் 4 அடியும் உயர்ந்துள்ளது.
அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீட்டரில்):
பாபநாசம் அணை 74 மி.மீ, பாபநாசம் கீழ் அணை 55 மி.மீ, சேர்வலாறு அணை 25
மி.மீ, கடனாநதி அணை 18 மி.மீ, ராமநதி அணை 8 மி.மீ, மணிமுத்தாறு அணை 98.2
மி.மீ, அம்பாசமுத்திரத்தில் 43.2 மி.மீ, சேரன்மகாதேவியில் 3.6 மி.மீ.
நீர்வரத்து கணிசமாக உயர்வு: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3380.07
கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1954 கனஅடியும், கடனாநதி
அணைக்கு விநாடிக்கு 215.98 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 55
கனஅடியும் நீர்வரத்து இருந்தது. சேர்வலாறு அணைக்கு கணிசமாக நீர்வரத்து
இருந்தது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 8.70 அடி உயர்ந்து 50.00 அடியாகவும்,
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 65.35 அடியாகவும், கடனாநதி
அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 60.00 அடியாகவும், ராமநதி அணையின்
நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 71.00 அடியாகவும், மணிமுத்தாறு அணையின்
நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 50.75 அடியாகவும் உயர்ந்துள்ளது.
தயாராகும் விவசாயிகள்: தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் தாமிரவருணி
பாசனத்தில் கார் பருவ சாகுபடி செய்யவில்லை. தற்போது வடகிழக்கு பருவ மழை
தொடங்கி பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின்
நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பிசான பருவ
சாகுபடி பணிகளை தொடங்க தயாராகி வருகின்றனர்.