திருநள்ளாறு அருகே ஸ்ரீபசுபதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
காரைக்கால் மாவட்டத்தில் ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு திங்கள்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு திங்கள்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரம் பெளர்ணமி திதி நாளில் சிவலிங்கத்திற்கு சிவாலயங்களில் அன்னாபிஷேகம் விமரிசையாக செய்யப்படுவது வழக்கம். காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் திங்கள்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
திருநள்ளாறு அருகே உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு 2 மூட்டை அரிசியில் சாதம் தயார் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.
கோவிலில் காலை விக்னேஸ்வர பூஜை, தொடர்ந்து பால், சந்தனம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரைக்கொண்டு கலசாபிஷேகம் நடத்தப்பட்டது.
அன்னத்தால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் டி.ராஜாசுவாமிநாத குருக்கள் தலைமையேற்று நடத்தினார். சுவாமிக்கு சதுர்வேதம், ஆகம ஆசீர்வாதம், தேவாரம் சமர்ப்பணம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
இதைபோன்று திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ பார்வதீஸ்வரர், ஸ்ரீ சோமநாதர், ஸ்ரீ அண்ணாமலைஈஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. திருமலைராயன்பட்டினம் காமன்கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மன்மதஈஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில் பூஜை ஏற்பாடுகளை காரைக்கால் நகராட்சி ஆணையர் ரேவதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.