மாணவனிடம் லஞ்சம்: கல்வித் துறை தினக்கூலி பெண் ஊழியர் கைது.
கடலூர்,செப்.7: மதிப்பெண் பட்டியல் வழங்க மாணவனிடம் ரூ.600 பெற்ற கல்வித்துறை தினக்கூலி பெண் ஊழியர் கண்ணகியை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் அ
கடலூர்,செப்.7: மதிப்பெண் பட்டியல் வழங்க மாணவனிடம் ரூ.600 பெற்ற கல்வித்துறை தினக்கூலி பெண் ஊழியர் கண்ணகியை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் அரசு தேர்வுத் துறை மண்டல இயக்குநரகம் இயங்கி வருகிறது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படும் இவ்வலுவலகத்தில், அரசு தேர்வு எழுதும் தனித்தேர்வளர்களுக்கு தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த அலுவலகத்தில் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த கண்ணகி கடந்த 16 வருடங்களாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பண்ருட்டி வட்டம் வீரசிங்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த சிவசக்தி(32), கடந்த 2010-ஆம் ஆண்டில் நடந்த 10-வது அரசு பொது தேர்வில் தோல்வி அடைந்து மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர் வேலை பெற 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தேவைப்பட்டதால், கடந்த 4-ஆம் தேதி கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் இயங்கும் அரசு தேர்வு துறை மண்டல இயக்குநரகத்திற்கு சென்று மதிப்பெண் பட்டியல் பெற் சென்றுள்ளார்.
அப்பணியை செய்து வந்த கண்ணகி ரூ.ஆயிரம் கொடுத்தால் மதிப்பெண் பட்டியலை தேடி எடுத்துத் தருவதாக கூறியுள்ளார். பின்னர் பேரம் பேசி ரூ.600-க்கு முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவசக்தி கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் செய்தார். வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு காவல் துறை இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான குழுவினர் சிவசக்தியிடம் ரூ.600 கொடுத்து அனுப்பி அலுவலக வளாகத்தில் இருந்தனர்.
அப்போது சிவசக்தியிடம் ரூ.600-ஐ பெற்ற கண்ணகியை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும்களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகியுள்ள கண்ணகி ஓரிரு வாரத்தில் நிரந்தரப் பணியாளராக ஆகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.