தற்போதைய செய்திகள்

புற்றீசல் போலப் பெருகிவிட்ட பட்டாசு ஆலைகள் முறைப்படுத்தப்படுமா?

மதுரை, செப். 8:  விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அவற்றின் மீதான கண்காணிப்பைத் தளர்த்துவதோடு, விபத்துகளையும் சாதாரண நிகழ்வுகளாக்கிவிட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும

சிவ. மணிகண்டன்

மதுரை, செப். 8:  விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அவற்றின் மீதான கண்காணிப்பைத் தளர்த்துவதோடு, விபத்துகளையும் சாதாரண நிகழ்வுகளாக்கிவிட்டது.

இந்த மாவட்டத்தில் மட்டும் சிறிதும், பெரியதுமாக ஏறத்தாழ 700 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் பெரும்பாலானவை விதிமுறைகளைப் பின்பற்றுவது கிடையாது. பயிற்சி இல்லாத தொழிலாளர்கள், பாதுகாப்பு வசதிக் குறைபாடு, வெடி மருந்துகளை அஜாக்கிரதையாகக் கையாள்வது எனக் குறைபாடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சமீப காலத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்துகளில், முதலிப்பட்டியில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில்தான் அதிகபட்சமாக 38 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஐந்து துறைகளின் நேரடிக் கண்காணிப்பு: பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பு (பிஇஎஸ்ஓ) உரிமம் வழங்குகிறது. இதைத் தொடர்ந்து தொழில்சாலைகள் துறை, தொழிலாளர் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை என அடுத்தடுத்து அனுமதியைப் பெற்று இத் துறைகளின் கண்காணிப்பில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

ஐந்து துறைகளின் கண்காணிப்பில் இருக்கக் கூடிய இந்தப் பட்டாசு ஆலைகளில், விதிமீறல்களுக்கு குறைவில்லை.

பெரும் விபரீதம் ஏற்பட்ட பிறகு தற்போது ஒவ்வொரு துறையும், விபத்துக்கு தாங்கள் காரணமல்ல என்று தப்பித்துக் கொள்ளவே பார்க்கின்றன.

தகவல் பரிமாற்றத்தில் இடைவெளி: இத்தகைய அபாயகரமான தொழிற்சாலை செயல்பட்டுவரும் சூழலில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூட்டாக ஆய்வு மேற்கொண்டால் விதிமீறல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்க முடியும்.

முதலிப்பட்டியில் விபத்து நேரிட்ட பட்டாசு ஆலையில் வெடிமருந்து துறை அதிகாரிகள் இரு வாரங்களுக்கு முன்பு ஆய்வு செய்துள்ளனர். அளவுக்கு அதிகமாக வெடிமருந்து மற்றும் பட்டாசு இருப்பு வைத்திருந்ததற்காக ஆலை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட உரிமம் செப்.4-ம் தேதியுடன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த தகவல் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினருக்கும் விபத்து நடந்த தினமான புதன்கிழமை மாலை தான் கிடைத்துள்ளது.

அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை: பொதுவாக பட்டாசு ஆலைகளில், அதிகாரிகள் ஆய்வு செய்து குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியபோதே, அதன் மீதான நடவடிக்கை என்ன என்பதை ஆலை உரிமையாளர்கள் தெரிந்து கொள்வர். முதலிபட்டி ஆலை விஷயத்திலும் அதே நிலைதான்.

 எப்படியும் ஆலையை மூட நடவடிக்கை எடுப்பார்கள் என உணர்ந்த காரணத்தினால்தான், இருக்கும் வெடி மருந்துகளைக் கொண்டு குறிப்பிட்ட நாள்களுக்கு அவசர அவசரமாக பட்டாசுகளைத் தயாரித்துள்ளனர்.

குறைபாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கும் தகவல், ஆய்வு முடிந்த ஓரிரு நாள்களிலேயே கிடைத்திருந்தால் கூட விபத்தை தடுக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பட்டாசு ஆலைகளுக்கு சல்பர் மருந்து பயன்படுத்துவதற்கான அனுமதியை மட்டுமே வருவாய்த் துறை வழங்குகிறது.

இச் சூழலில் பட்டாசு ஆலை கண்காணிப்பில் இருக்கும் அனைத்துத் துறைகளும் கூட்டாக ஆய்வு மேற்கொள்வதன் மூலமாகவே, குறைபாடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அத்தகைய நடைமுறையைப் பின்பற்றுவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கண்டுகொள்ளப்படாத விதிமுறைகள்: "விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில், விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. 35 அறைகள் இருக்க வேண்டிய இடத்தில் அதற்கும் மேலாக பட்டாசு தயாரிப்பதற்கான அறைகள் கட்டப்பட்டுள்ளன' என்று அங்கு கள ஆய்வு மேற்கொண்ட எவிடன்ஸ் தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

"முதலிப்பட்டி பட்டாசு ஆலைக்கு 35 கட்டடங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 120 தொழிலாளர்கள் மட்டுமே பணி செய்த அனுமதித்த நிலையில், இங்கு 320 பேர் பணியாற்றியுள்ளனர்.

 பட்டாசு ஆலைக்கென நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைக் கருத்தில் கொள்ளாமல் இந்த ஆலை செயல்பட்டு வந்துள்ளது' என்கிறார் எவிடன்ஸ் தன்னார்வ அமைப்பு செயல் இயக்குநர் ஏ.கதிர்.

புறக்கணிக்கப்படும் தொழிலாளர் நலன்: குடிசைத் தொழிலாகத் துவங்கி தற்போது ஏற்றுமதி அளவுக்கு உயர்ந்துள்ள பட்டாசு தொழில் ஆல விருட்சமாக வேரூன்றிவிட்டது. வேகமான வளர்ச்சியில் இத் தொழில் இருந்தாலும், தொழிலாளர்களின் நலன் என்பது புறக்கணிக்கப்பட்டதாகவே இருக்கிறது.

எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் பட்டாசு ஆலைகளுக்கு மேலும் மேலும் அனுமதி கொடுப்பதால், முதலிப்பட்டி போன்ற விபத்துகளைத் தவிர்க்க முடியாததாக்கி விடும். ஆகவே, முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தாமதிக்காமல் எடுக்க வேண்டியது அவசர அவசியமானது.

ஆட்சியரின் பரிந்துரை செயல்படுத்தப்படுமா?

பட்டாசு ஆலைகள் முறைப்படுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கையை விருதுநகர் மாவட்ட முந்தைய ஆட்சியர் மு.பாலாஜி தமிழக அரசுக்கு அனுப்பினார்.

பட்டாசு ஆலைகளால் ஏற்படக்கூடிய விபரீதங்களைத் தவிர்ப்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்ட அவர், ஓராண்டுக்கு முன்பு அறிக்கையை அரசுக்கு அளித்தார். இதில் பட்டாசு ஆலைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரை செய்தார். அரசு நிர்ணயித்துள்ள சட்ட, விதிகளுக்கு உள்பட்டு அனுமதி கோரும்பட்சத்தில் பட்டாசு ஆலைகள் துவங்க அனுமதி மறுக்க முடியாது.

அதேநேரம், ஒரு கிராமத்தில் இத்தனை ஆலைகள்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அரசு கொள்கை முடிவாகக் கொண்டு வரும்பட்சத்தில் ஆலைகள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்த முடியும் என்று அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கையை அரசு பரிசீலனை செய்வது, வரும் காலங்களில் பட்டாசு ஆலைகளால் ஏற்படக்கூடிய விபரீதங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கையாக இருக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT