அகஸ்தியர் கோவில் பங்குனித் திருவிழா: கல்லிடைக்குறிச்சியில் பக்தர்கள் அங்க பிரதட்சனம்
கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோவில் பங்குனி 7 ம் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்தனர். தெட்சணாமூர்த்தி, பொதிகாசலம் கோஷங்கள் முழங்க பக்தர்கள் அங்கபிரதட்சனம், கும்பிடுநமஸ்காரம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோவில் பங்குனி 7 ம் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்தனர். தெட்சணாமூர்த்தி, பொதிகாசலம் கோஷங்கள் முழங்க பக்தர்கள் அங்கபிரதட்சனம், கும்பிடுநமஸ்காரம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோவில் பங்குனித் திருவிழா கடந்த 5 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவிலில் 7 ம் நாளான வியாழக்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேகம், பச்சை சாத்தி சப்பரம் நடைபெற்றது. இதையடுத்து கோவிலில் இருந்து தாமிரவருணி ஆற்றுக்கு புறப்படும் வைபவம் நடைபெற்றது. நதியில் நீராடி பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுóத்து வந்தனர்.
கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகர் வழிபாட்டு குழுவினர் தேவாரம் பாடி வந்தனர். விரதமிருந்த ஆண்களும், பெண்களும் ஏராளமானோர் வேம்படி அம்மன் கோவில் தெருவில் இருந்து கோவில் வரை தெட்சிணாமூர்த்தி, பொதிகாசலம் கோஷங்கள் முழங்க அங்கபிரதட்சனம், கும்பிடுநமஸ்காரம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகளும், அன்னமண்டபத்தில் அன்னம் சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவில் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி குமாரர்கோவில் தெற்கு ரதவீதிக்கு வந்தனர். அங்கு அகத்தியருக்கு முருகப் பெருமான உபதேசக் காட்சி வைபவம் நடைபெற்றது. திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மோர், குளிர்பானம் வழங்கல்: திருவிழாவையொட்டி நுகர்வோர் பாதுகாப்பு மையம் உள்பட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலம் பக்தர்களுக்கு நீர், மோர், பானம் வழங்கப்பட்டன. மோர் பந்தலை பேரூராட்சித் தலைவர் க. இசக்கிபாண்டியன் திறந்து வைத்தார். பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் வே. சுப்பிரமணியன், நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் எஸ். ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.