தற்போதைய செய்திகள்

இலங்கையின் வஞ்சகத்தை இப்போதாவது உணருங்கள்: கோத்தபய ராஜபட்ச பேச்சுக்கு ராமதாஸ் கண்டனம்

தினமணி

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்சவின் இந்தியா குறித்த அவதூறுப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவுனர் ராமதாஸ், இப்போதாவது இலங்கையை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கை பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அந்நாட்டின் பாதுகாப்புத் துறை செயலாளரும், அதிபர் ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார். அவரது குற்றச்சாற்றுக்கள் கடுமையாக கண்டிக்கத் தக்கவை.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நடத்தியதே இந்தியா தான் என்றும், இலங்கைப் போரை நிறுத்தும்படி உலக நாடுகளிடமிருந்து நெருக்கடி வந்த போதெல்லாம் அதை சமாளித்து இலங்கையை காப்பாற்றியது இந்தியா தான் என்றும் தான்  கோத்தபாய ராஜபக்சே இதுவரை கூறி வந்தார். ஆனால், இப்போது தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக குற்றஞ்சாட்டத் தொடங்கியுள்ளார். இதற்குக் காரணம் இலங்கை அரசு தற்போது முழுக்க முழுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் எதிரி நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது தான். சீனாவைக் காட்டி மிரட்டியே இந்தியாவிடம் காரியம் சாதித்துக் கொண்ட இலங்கை, இப்போது காரியம் முடிந்ததும் இந்தியாவை கைவிட்டு சீனாவிடம் தஞ்சம் அடைந்து விட்டது.

இலங்கை அரசு வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிராக செயல்படத் தொடங்கிவிட்ட போதிலும், இலங்கை எங்கள் நட்பு நாடு என்ற வசனத்தையே இந்தியா திரும்பத் திரும்ப கூறிவருகிறது. கோத்தபாய ராஜபக்சேவின் இந்தக் குற்றச்சாற்று குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி, அந்த குற்றச்சாற்றுகளை மறுக்காமல், இலங்கையை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் என்று கூறியிருப்பதை பார்க்கும்போது இலங்கையை இந்தியா இன்னும் புரிந்து கொள்ளவில்லையோ? என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 1962-ஆம் ஆண்டு சீனா போரின் போதும், அதன் பின்னர் நடந்த பாகிஸ்தானுடனான போர்களின் போதும் இலங்கை அரசு இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கவில்லை.

இலங்கையை எந்தக் காலத்திலும் நம்பக்கூடாது என்று மத்திய அரசை தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை இந்தியா மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக சீனா பக்கம் இலங்கை சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக கச்சத்தீவு போன்ற தமிழகத்தின் சொத்துக்களை இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்தது. இப்போது இந்தியாவுக்கு எதிராக இலங்கை திரும்பியிருப்பதன் மூலம் அந்நாடு தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை தோல்வியடைந்து விட்டது உறுதியாகிவிட்டது.

எனவே, இனியாவது இலங்கையின் வஞ்சகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். அண்டை நாடு, நட்பு நாடு என்று கூறிக்கொண்டு இலங்கையின் தவறுகளுக்கு துணை போவதை விட வேண்டும். இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை திருமபப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழீழம் தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என்பதை உணர்ந்து, அதற்கேற்றவாறு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசு மாற்றியமைக்க வேண்டும்.

- என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT